தூலிகை
ஓவியம் வரைவது பெரும்பாலும் எல்லோருக்குமே பிடிக்கும். அதில் அதிக நாட்டம் இல்லாவிட்டாலும்கூட, கண்டிப்பாக ஓரிரு படங்களையாவது வரைந்திருப்போம். தற்போது வரைய விதவிதமான தாள்கள் இருக்கின்றன. ஆனால், பழங்காலத்தில் தாள்கள் (Paper) கிடையாது.அவர்கள் சுவர்களில்தான் சித்திரம் வரைந்து வைத்து அழகு பார்த்தார்கள். அதனால்தான், 'சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா' என்ற பழமொழியே வந்தது.சித்திரம் எழுதும் கோலுக்கு தூலிகை என்று பெயர். தூரிகை என்றும் அது வழங்கப்படுகிறது. நேர்கோடு, வளைந்த கோடு, கோணல் கோடுகளைக் கொண்டு சித்திரம் வரையப்பட்டது. இப்படிக் கோடுகளால் வரையப்பட்ட ஓவியங்களுக்கு, புனையா ஓவியம் (Out line drawing ) என்று பெயர்.அரண்மனை, மாளிகை, கோவில் சுவர்களில் சித்திரங்கள் வரையப்பட்டன. கோடுகளால் வரையப்பட்ட ஓவியத்தை, பின்னர் வண்ணங்கள் கொண்டு நிரப்புவார்கள். கோவில் சுவர்களில், கடவுள் உருவங்களும், அரண்மனைச் சுவர்களில் பூக்கள், பறவைகள், விலங்குகள் போன்ற இயற்கைக் காட்சிகளும் வரையப்பட்டன. தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் அரண்மனை மாடங்கள், சித்திரங்கள் வரையப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது என்பதை (வெள்ளியன்ன விளக்குஞ் சுதையுரீஇ) நெடுநெல் வாடை பாடல் ஒன்று குறிப்பிடுகிறதுதற்போது, சென்னை மாநகரிலும், ஆங்காங்கே சுவர் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?