பாடச்சுமையைக் குறைக்க ஆலோசனை சொல்லலாம்!
பாடங்களைப் புரிந்து படிப்பதைவிட, மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் வகையிலேயே இந்தியக் கல்வி முறை அமைந்துள்ளதாகக் கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். இதைச் சரிசெய்யும் வகையில், பாடத்திட்டக் கொள்கையை மாற்றியமைக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் பாடச்சுமையைக் குறைத்து, கற்றல் திறனை மேம்படுத்த பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட புத்தகங்களை வெளியிடும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கெளன்சில் (NCERT/ -என்.சி.இ.ஆர்.டி.) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஆளுமை வளர்ச்சிக்கு, வாழ்க்கைக் கல்வி, அனுபவக் கல்வி, விளையாட்டுத்திறன் மற்றும் ஆக்கத்திறன் அவசியம். புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து எழுதுவது மட்டும் கல்வியாகாது. பாடச்சுமையால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். வளர்ச்சிக்கு அவசியமான மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. என்.சி.இ.ஆர்.டி.க்கு இதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் கிடைத்துள்ளன. பொதுமக்களும், தங்கள் கருத்துகளை அனுப்பி வைக்கலாம். ' என்று தெரிவித்துள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் தங்கள் கருத்துகளை, ஆலோசனைகளை pattam@dinamalar.in என்ற முகவரிக்கு அனுப்பலாம். பயனுள்ள ஆலோசனைகளைத் தொகுத்து, நாங்கள் என்.சி.இ.ஆர்.டி.க்கு எடுத்துச் செல்வோம்.