மீன்களால் நிலத்தில் சுவாசிக்க முடியுமா?
ஒரு மீனால் எவ்வளவு நேரம் தண்ணீருக்கு வெளியே இருக்க முடியும்? வீட்டில் வளர்க்கும் மீன்கள், தொட்டியில் தண்ணீரை மாற்றும்போது கொஞ்ச நேரம் வெளியே இருந்தாலே சிரமப்படும். ஆனால், சில வகை மீன்கள் நீரின் மேற்பரப்பிற்கு வந்து காற்றைச் சுவாசிக்கும் என்றால் நம்ப முடிகிறதா? மீன்களில் பல வகைகள் உள்ளன. அவை வெவ்வேறு விதமான சுவாச திறன்களைக் கொண்டுள்ளன. ஆகையால், ஒரு மீன் நீரிலிருந்து வெளியே வந்த பிறகு, எவ்வளவு நேரம் உயிர்வாழ முடியும் என்பதைச் சரியாக கூற முடியாது. அது அவற்றின் திறனைப் பொறுத்தது.முதலில், மீன்கள் நீருக்கடியில் எவ்வாறு சுவாசிக்கிறது என்பதைப் பற்றி அறிந்துகொண்டால், அவை எப்படி காற்றைச் சுவாசிக்கிறது என்பதைப் பற்றியும் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். எல்லாக் கடல் உயிரினங்களையும் போலவே, மீன்களுக்கும் உயிர்வாழ தண்ணீர் தேவை. அவை நம்மைப் போலவே ஆக்சிஜனைச் சார்ந்துள்ளன. பெரும்பாலானவை,தண்ணீரிலிருந்தே ஆக்சிஜனைப் பெறுகின்றன.நமக்கு நுரையீரல் போல, மீன்களுக்கு செவுள்கள். அவற்றின் தனித்துவமான சுவாச அமைப்புகள், தேவையற்ற வாயுக்களை வெளியேற்றும். அதே சமயம் செவுள்களின் மேற்பரப்பில் காணப்படும் சிறிய இரத்த நாளங்களைப் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி, அதிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்துக்கொள்ளும். உதாரணமாக சில மீன் வகைகளைப் பார்ப்போம்.