வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கலாமா?
நம் கல்வி முறையில் புதிய மாற்றங்களும், கற்பித்தல் உத்திகளும் கையாளப்பட்டு வருகின்றன. இந்தியப் பல்கலைக்கழகங்கள் தவிர, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் தற்போது தங்கள் படிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது நன்மை பயக்குமா? சென்னை, செட்டிபேடு, அப்பல்லோ வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களிடம் உரையாடினோம். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நம் நாட்டில் அனுமதிப்பதால், நன்மை, தீமை இரண்டுமே இருக்கிறது. நம் கல்வி முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பு நேரம் குறைவு. குறைவான நேரத்திலேயே சிறப்பான முறையில் பாடங்களைக் கற்பிப்பதற்கான வசதிகள் உள்ளன. அதேசமயம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டால், மாணவர்கள் கல்விக்காக அதிகம் செலவு செய்ய நேரிடும்.தி.யுவலஷ்மி, 12ம் வகுப்புநம் கல்வி முறையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது உண்மைதான். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், இந்தியாவுக்கென தனியாகப் பாடத்திட்டங்களை ஏற்படுத்துவதில்லை. நம் பாடத்திட்டத்தையும் அதுபோல தரமான முறையில் மேம்படுத்தினால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புகிற மாணவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று படித்துக்கொள்வார்கள். இந்தியாவிற்கு ஏற்றபடியான கல்வியை நமது பல்கலைக்கழகங்களால் மட்டுமே தர முடியும். மேலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதால், கல்வி எல்லா தரப்பினரும் படிக்க முடியாத எட்டாக்கனியாகிவிடும்.க.ஸ்ரீ.சாத்விக், 9ம் வகுப்புஆக்ஸ்ஃபோர்டு, லண்டன் கேம் பிரிட்ஜ் போன்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே இந்தியாவில் செயல்படுகின்றன. கல்வி வியாபாரமாகி விட்ட சூழ்நிலையில், தரமான கல்வியைத் தர நம் பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும். நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி பாடத்திட்டங்களை வடிவமைத்து கல்வி புகட்டினால், மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நம் மொழி, கலாசாரத்திற்கு உகந்த கல்வியைத் தர இந்தியப் பல்கலைக்கழகங்களால் மட்டுமே முடியும். அதை சிறப்பான விதத்தில் பல்கலைக் கழகங்கள் தங்கள் தரத்தை உயர்த்தி அமைக்க வேண்டும்.ச.சுபஸ்ரீ, 10ம் வகுப்புவெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிக்கலாம். ஏனென்றால், நம்முடைய கல்வி நிறுவனங்கள் அவர்களைப் போலவே தரமான கல்வியைத் தர முன் வருவார்கள். போட்டி இருந்தால்தான் சிறப்பான கல்வியைத் தர முடியும். உலக அளவில் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நல்ல பெயர் உள்ளது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வருவதன் மூலம் பல சிறப்பான கற்பித்தல் உத்திகளை நாம் தெரிந்துகொள்ள முடியும். நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, நாம் கற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம், கல்வித் தரம் உயருமே தவிர, வேறு எந்தப் பாதிப்பும் கிடையாது. எல்லா தரப்பு மாணவர்களும் பயிலும் விதத்தில் கல்விக் கட்டணங்களை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். ரா.பூர்வஜா, 10ம் வகுப்புநமது கல்வி முறையில் உள்ள சிறப்பான அம்சங்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களால் அளிக்க முடியாது. அவர்கள் அளிக்கிற பாடத்திட்டங்கள் உலகளாவிய அம்சங்களைக் கொண்டிருந்தாலும், நம்முடைய நாட்டில் படித்து, பணிபுரியப் போகிற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கல்வி தேவையில்லை. வெளிநாட்டில் உள்ளது போன்ற சிறந்த கல்வி முறையை இந்தியாவில் அளிக்க, நம் பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நாட வேண்டியதில்லை.வி.க.விஸ்வநாத், 10ம் வகுப்புவெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படுவதால் பல நன்மைகள் ஏற்படும். நமது நாட்டில் இன்னும் ஐம்பது சதவீதம் மக்களுக்குத் தரமான கல்வி கிடைக்காத நிலையே உள்ளது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதன் மூலம் மாணவர்களின் கல்வித் திறன் உயரும். வெளிநாட்டுப் பல்கலைகக்கழகங்களை அனுமதித்தால் போட்டி அதிகம் இருக்கும். இதன் மூலம் கல்விக் கட்டணம் குறையும் வாய்ப்பு உள்ளது. கல்வித் தரம் உயரவும், சிறப்பான பாடத்திட்டங்களை அறிமுகம் செய்யவும் நம் இந்தியப் பல்கலைக்கழகங்களும் முன்வரும். எனவே, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கலாம்.ஷ.ஸ்ரீஷங்கர், 9ம் வகுப்பு