உள்ளூர் செய்திகள்

கோழிப்போர்!

பண்டைத் தமிழகத்தில், போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் நடுவது வழக்கம். இத்தகைய நடுகற்கள் சேலம், தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அதிகம் காணப்படுகின்றன. ஊரின் நன்மைக்காகப் போராடி இறந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இத்தகைய கற்கள் நடப்பட்டன. ஆனால் சேவலுக்கும்கூட அக்காலத்தில் நடுகற்கள் வைத்துள்ளது வியப்பான ஒன்று. பொழுதுபோக்கிற்காக அக்காலத்தில் சேவல் சண்டைகள் (போர்) நடத்தப்பட்டன. அச்சண்டையில் இறந்த சேவல்களுக்கே இவ்வாறு கற்கள் நடப்பட்டுள்ளன. விழுப்புரம் அருகே அரசலாபுரத்தில் காணப்பட்ட நடுகல்லில் சேவல் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 'முகையுரு மேற்சேரியாடி கருகிய கோழி' என்று அந்த நடுகல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. 'முகையுரு என்ற ஊரில் நடந்த கோழிப்போரில் இறந்து போன சேவலுக்கு இந்த நடுகல்' என்பதே அதன் பொருள்.காஞ்சிபுரம் மாவட்டம், இந்தளூர் என்ற ஊரிலும் சேவலுக்கான நடுகல் உள்ளது. இதில், 'கீழச்சேரி கோழி பொடு கொத்த' என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் வழிபடுகிறார்கள். 'மேழகத் தகரோடு சிவல் விளையாட' என்பது பட்டினப்பாலை வரி. சேவல் (சிவல்) விளையாட்டை அன்றைய மக்கள் இரசித்துள்ளார்கள் என்பது தெரிகிறது.'குப்பைக் கோழித் தனிப்போர் போலவிளிவாங்கு விளியின் அல்லதுகளைவோரிலை யாம் உற்றநோயே'என்பது குறுந்தொகைப் பாடல்.குப்பைக் கோழிப்போர் விலக்குவார் இல்லாதது. அது கோழியின் சாவு வரையிலும் கூடப் போகும். அது போல் தன் நோயும் அப்படித்தான் ' என்கிறாள் தலைவி. (கோழிச்சண்டையில் அதன் உரிமையாளர்கள் சேவல்களை விலக்கி, தண்ணீர் ஊற்றுவர்)தமிழகத்தின் தொன்மைக்கு, சேவலுக்கான நடுகல்லும் ஒரு சான்றாகும்.-- கி. ஸ்ரீதரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !