உள்ளூர் செய்திகள்

நறு வீ முல்லை

மல்லிகை, முல்லை, ரோஜா, இருவாட்சி என்று விதவிதமான பூக்கள் இருந்தாலும், அனைத்தும் ஒரே காலத்தில் பூப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு பருவம். சில பூக்கள் கோடைக்காலத்திலும், சில மழைக்காலத்திலும் பூக்கும். உதாரணம் முல்லை. 'கார் நயந்து எய்தும் முல்லை' என்பது ஐங்குறுநூறு பாடலின் வரி.கார் என்பது மழையைக் குறிக்கும். மழைக்காலத்தில் மாலையில் மலர்ந்து நறுமணத்தைக்கொடுக்கும் மலர் முல்லை. முற்காலத்தில் வழிபாட்டிற்கும், வாழ்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது.'நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது' இது, முல்லைப்பாட்டின் வரி. தமிழர் வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மங்கல மலராகப் பயன்படுத்தப்பட்டது முல்லை. பெண் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி குடும்பம் நடத்துவதை முல்லை மலரோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளனர்.'முல்லை சான்ற கற்பின் மெல்லியல்' (அகநானூறு 274) நறு மணமுடைய முல்லை மலர் அணிந்த தலைவி என்று குறிப்பிடுகிறது அந்தப் பாடல்.தமிழர்களின் ஐந்து நிலங்களில் ஒன்று முல்லை என்பதும் நீங்கள் அறிந்ததே.சங்க இலக்கியம் கலித்தொகையில் ஒரு பகுதியாக விளங்கும் முல்லைக்கலியில், முல்லைத்திணைக்குரிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முல்லை என்பது செடி (கொடி) யின் பெயர் எனினும், அதன் பூவிற்கும் அதுதான் பெயர்.ஒன்றின் பெயர் அதன் உறுப்புக்கும் பெயராகி வருவதை, இலக்கணத்தில் சினையாகு பெயர் என்று குறிப்பிடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !