உள்ளூர் செய்திகள்

சொற்களை ஆணையாக்கியவர்

'கோரல் மில்'.அன்றைய தூத்துக்குடியிலிருந்த ஒரு நூற்பாலை அது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கே வேலை செய்துகொண்டிருந்தார்கள்.ஆனால், அவர்களுடைய உழைப்பினாலே கொழித்த அந்த ஆலை, பதிலுக்கு அந்தத் தொழிலாளர்களை நன்முறையில் நடத்தவில்லை. மிகக்குறைவான கூலி மட்டுமே கொடுத்தது. போதுமான விடுமுறைகளைத் தராமல் அவர்களைக் கசக்கிப் பிழிந்தது. எந்த அடிப்படை வசதியையும் அவர்களுக்குச் செய்து தரவில்லை.தொழிலாளர்களும் பொறுமையுடன் ஆலை நிர்வாகத்திடம் பலமுறை பேசினார்கள். ஆனால், அவர்களுடைய நியாயமான 'கோரல்'கள் எவையும், 'கோரல் மில்' முதலாளிகளிடம் எடுபடவில்லை. தொழிலாளர்கள் தொடர்ந்து சிரமங்களை அனுபவித்தார்கள்.நிறைவாக, வேறு வழியே இல்லாமல் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தார்கள். 'எங்களுடைய உரிமைகள் கிடைக்கும்வரை வேலைக்கு வரமாட்டோம்' என்று அறிவித்தார்கள்.ஆனால், என்னதான் அவர்களுடைய போராட்டம் நியாயமாக இருப்பினும், நிர்வாகம் உடனே பணிந்துவிடுமா? அவர்கள் வழிக்கு வரும்வரை தொழிற்சாலை இயங்கவில்லை. சம்பளம் தரவில்லை. ஊதியம் கிடைக்காமல் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் பிழைப்பதெப்படி? ஒருவேளை, இதற்கு அஞ்சித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை நிறுத்திவிட்டால்?இந்த நேரத்தில், அவர்கள் மத்தியில் ஒரு தலைவர் தோன்றினார். 'உங்களுடைய உரிமைகள் கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடாதீர்கள்' என்றார். 'ஆனால் அதற்காக, நீங்கள் பட்டினி கிடக்கவேண்டியதில்லை. உங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று முழங்கினார்.வெறுமனே சொல்வதோடு நிறுத்தவில்லை. இதற்காக அவரே பலரிடம் சென்று நிதி திரட்டினார். அதைக் கொண்டு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவினார்.இன்னொருபக்கம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மற்ற பொதுமக்கள் தற்காலிக வேலைகளைக் கொடுத்து ஆதரிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால், பலர் மீண்டும் கொஞ்சமாவது சம்பாதிக்கத் தொடங்கினார்கள்.இத்துடன், அவர் தொழிலாளர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிவந்தார். அதில் அவர்களுடைய உரிமைகளை அவர்களுக்கே புரியவைத்து, போராட்டத்தைத் தொடரவேண்டும் என்று ஊக்குவித்தார்.இதனால், முதலாளிகளுக்கு அவர்மீது எரிச்சல் வந்தது. 'இனி அவர் எந்தக் கூட்டத்திலும் பேசக்கூடாது' என்று நீதிமன்றத்துக்குச் சென்றார்கள்.உடனே, நீதிமன்றம் அவரை அழைத்தது. 'நீங்கள் பேசினால் ஊரில் கலவரம் ஏற்படுகிறதாம். இனிமேல் நீங்கள் எந்தப் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளக்கூடாது' என்றது.உரிமைக்காகப் போராட வந்துவிட்ட பிறகு, இதுபோன்ற தடைகளெல்லாம் எம்மாத்திரம்? அவர் தொடர்ந்து கூட்டங்களில் கலந்துகொண்டு, பேசிவந்தார். அவருடைய சொற்களைத் தொழிலாளர்கள் கவனித்துக் கேட்டுப் பின்பற்றினார்கள்.ஒரு வாரத்துக்குமேல் நீடித்த வேலைநிறுத்தத்தால், கோரல் மில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நிறைவாக, நிர்வாகம் பணிந்தது. ஊழியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துதர உறுதிகொடுத்தது.அத்தனை தொழிலாளர்களைத் தன்னுடைய பேச்சாலும் அன்பான அணுகுமுறையாலும் கட்டிப்போட்ட அந்தப் பெருந்தலைவர், 'கப்பலோட்டிய தமிழன்' எனப் போற்றப்படும் வ.உ.சிதம்பரனார்தான்.'வ.உ.சி.யின் சொற்கள் அன்றைய மக்களுக்கு ஆணையாயிற்று' என்கிறார் வரலாற்றாளர் நா. வானமாமலை. 'வழக்கறிஞர் ஒருவர் சிதம்பரனாரைக் குறைவாகப் பேசியதைக் கேட்ட நாவிதர், அவருக்குப் பாதிச் சவரம் செய்து அப்படியே விட்டுவிட்டார். வெள்ளையர்களை ஆதரித்தவர்களை வண்டிக்காரர்கள் தமது வண்டிகளில் ஏற்றவில்லை.'உரிமையைப் பேசிய சொற்களுக்கு என்னவொரு மரியாதை பாருங்கள்! அதுதான் உண்மையின் ஆற்றல்.என். சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !