குழம்பிய கொலம்பஸ்!
வரலாறு பாடத்தில் இருந்து, 'அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யார்?' என்று கேள்வி கேட்டால் 'கொலம்பஸ்' என்று ஒரே குரலில் சொல்லிவிடுவோம்! எப்படிக் கண்டுபிடித்தார் என்று தெரியுமா? ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ், 1492ல் “இந்தியாவைக் காணப் புறப்படுகிறேன்” என்று சொல்லிவிட்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்தார். அமெரிக்க நிலப்பரப்பைப் பார்த்துவிட்டு, அதுவே இந்தியா எனக் குழம்பினார் கொலம்பஸ் என்பது வரலாறு! அமெரிக்கா ஒரு கண்டம். இந்தியாவைவிட மூன்று மடங்கு பெரிய நிலப்பரப்பு கொண்டது. நிலக்கரி, செம்பு, ஈயம், யுரேனியம், இரும்பு, நிக்கல், பெட்ரோலியம் என வகைவகையான இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் தேசம். இளைஞர்களின் கனவு உலகம்; தொழில்நுட்பம் மட்டுமின்றி தொழில் உத்திகள், மேலாண்மை என எல்லாவற்றிலும் அவர்களை மிஞ்ச ஆளே இல்லை!உலக ஜனநாயகத்தின் முதல் வழிகாட்டியும் அமெரிக்காதான். அங்கே, 1788ஆம் ஆண்டில் இருந்து மக்களாட்சி நடக்கிறது. முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றும் உலகின் செல்வாக்குமிக்க பணக்கார நாடு. இன்றைய இந்திய மதிப்பின்படி ஒரு டாலர் சுமார் 67 ரூபாய்.இத்தனை சிறப்பு வாய்ந்த அமெரிக்காவை ஆளும் அதிபர் என்பவர் கிட்டத்தட்ட மன்னர் போன்றவர்தான். நான்கு வருட காலம் பதவியில் இருக்கலாம். இரு முறைக்கு மேல் தொடர்ச்சியாக ஒருவர் பதவியில் இருக்க முடியாது! பாரக் உசேன் ஒபாமா, 44ஆவது அதிபராக இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவருடைய பிறந்தநாள், ஆகஸ்ட் 4, 1961.