வடமொழிச் சொற்சேர்க்கைகள்
மடத்திற்குத் தலைவராய் விளங்குபவர் அந்த மடத்தின் அதிபதி ஆவார். அந்தச் சொல்லை 'மடாதிபதி' என்று சேர்த்துச் சொல்வதுண்டு. மடம் + அதிபதி என்றால், 'மடத்து அதிபதி' என்று வருவதே தமிழ்ப் புணர்ச்சி. ஆனால், புதிய வழக்காக 'மடாதிபதி' என்கிறோம். எப்படி?முதலில் இந்தச் சொல் தமிழ் இலக்கணப்படி சேரவில்லை. வடமொழி இலக்கணப்படி சேர்ந்திருக்கிறது.சொற்சேர்க்கையில் இரண்டு சொற்களும் வடமொழியாக இருந்தாலோ, இரண்டாம் சொல் வடமொழியாக இருந்தாலோ, வடமொழிப் புணர்ச்சி வழிப்படியே சேரும். அ, ஆ என்று முடியும் சொற்களோடு அ, ஆ என்று தொடங்கும் சொற்கள் வந்தால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து ஆகார நெடிலாகிவிடும். இரண்டாம் சொல்லின் முதலில் வரும் உயிரெழுத்து மறைந்துவிடும்.தேவ + ஆலயம் = தேவாலயம்ஞான + அமிர்தம் = ஞானாமிர்தம்சதா + ஆனந்தம் = சதானந்தம் இ, ஈ என்று முடியும் சொற்களை அடுத்து இ, ஈ என்று தொடங்கும் சொற்கள் வந்தால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து, ஈகார நெடிலாகிவிடும். இரண்டாம் சொல்லின் முதலெழுத்து மறைந்துவிடும்.கிரி + ஈசன் = கிரீசன்முனி + இந்திரன் = முனீந்திரன்மகீ + ஈசன் = மகீசன்உ, ஊ என்று முடியும் சொற்களை அடுத்து உ, ஊ என்று தொடங்கும் சொற்கள் வந்தால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து ஊகார நெடிலாகிவிடும். இரண்டாம் சொல்லின் முதலெழுத்து மறைந்துவிடும்.குரு + உபதேசம் = குரூபதேசம்அ, ஆ என்று முடியும் சொற்களை அடுத்து இ, ஈ என்று தொடங்கும் சொற்கள் வந்தால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து ஏகார நெடிலாகிவிடும். இரண்டாம் சொல்லின் முதலெழுத்து மறைந்துவிடும்.நர + இந்திரன் = நரேந்திரன்சர்வ + ஈஸ்வரன் = சர்வேஸ்வரன்இராஜ + ஈஸ்வரி = இராஜேஸ்வரிமகா + ஈஸ்வரன் = மகேஸ்வரன்அ, ஆ என்று முடியும் சொற்களை அடுத்து உ, ஊ என்று தொடங்கும் சொற்கள் வந்தால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து ஓகார நெடிலாகிவிடும். இரண்டாம் சொல்லின் முதலெழுத்து மறைந்துவிடும்.ஞான + உபதேசம் = ஞானோபதேசம்மகா + உன்னதம் = மகோன்னதம்வடமொழி வழியில் சேர்கின்ற சொற்கள் இவ்வாறுதான் சேர்கின்றன.- மகுடேசுவரன்