உள்ளூர் செய்திகள்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

கடந்த டிசம்பர் மாதம், மத்திய சீனாவின் வுஹான் நகரப்பகுதியில் கொரோனா வைரஸால் இதுவரை 46 பேர் இறந்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் அண்டை நாடுகளுக்கும் விரைவாகப் பரவத் தொடங்கியது. சுமார் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தற்போது சீனாவை ஆட்டிப்படைத்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நோவெல் கொரோனா வைரஸ் (2019 novel coronavirus (2019nCoV))என்கிற குறிப்பிட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தை சீனாவில் கண்டறிந்தது. மத்திய சீனாவின் முக்கியமான நகரத்தில் இருக்கும் கடல் உணவுகள் மற்றும் மற்ற இறைச்சிகள் விற்கப்படும் சந்தையில் இருந்துதான் இந்தத் தொற்று, முதன்முதலில் மனிதர்களுக்குப் பரவியது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது கவலை அளிப்பதாக உள்ளது. சீனாவைத் தவிர, ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. சீனாவில், சிவியர் அக்யுட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் (Severe acute respiratory syndrome (SARS) என்கிற குறிப்பிட்ட ஒரு கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் 18 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. சீனா மற்றும் ஹாங்காங்கில் கடும் பாதிப்பை உண்டாக்கியது. இதில் கிட்டத்தட்ட 650 பேர் இறந்தார்கள். வௌவால்களின் உடலில் இருந்த இந்த வைரஸ் புனுகுப்பூனைகளின் உடலுக்குச் சென்று அவற்றிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது.இதேபோல், ஏழு ஆண்டுகளுக்குமுன், மத்திய கிழக்கு நாடுகளில் MERS coronavirus (MERSCoV) என்கிற ஒருவகையான கொரோனா வைரஸ் மக்களைப் பாதித்தது. ஒற்றைத் திமில் கொண்ட ஒட்டகங்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவத் தொடங்கியது. முதன்முதலில் செளதி அரேபியாவில் இந்தத் தாக்குதல் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு சுமார் எண்ணூறு பேர் இறந்திருக்கிறார்கள்.கொரோனா வைரஸ் சில முக்கிய தகவல்கள்: * மூக்கு, சைனஸ் பகுதிகள் மற்றும் தொண்டையின் மேற்பகுதி போன்றவற்றில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவுகிறது.* காற்றின் வழியாகவோ அல்லது கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகுவதால், இந்த நோய்த் தாக்குதல் அடுத்தடுத்து மற்றவர்களுக்குப் பரவத் தொடங்குகிறது. * எல்லா கொரோனா வைரஸ் தாக்கமும் ஆபத்தானவை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், சில வகைக் கொரோனா வைரஸ் தாக்குதல்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. * காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வயிற்றில் பிரச்னை போன்றவை இந்த வைரஸ் தாக்குதலின் பொதுவான அறிகுறிகள்.* நிமோனியா, அதீத சுவாசப்பிரச்னை, சிறுநீரக செயலிழப்பு, உயிரிழப்பு போன்றவை இந்தநோயின் கடுமையான விளைவுகளாக இருக்கின்றன.* இந்த நோயைத் தடுக்க தடுப்பூசிகளோ அல்லது எதிர் வைரஸ் மருந்துகளோ இதுவரை கண்டறியப்படவில்லை.இந்த நோயின் அறிகுறிகளை வைத்து மட்டுமே அதற்கான சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்தியா சமாளிக்குமா?இந்த வைரஸ் இந்தியாவில் பரவினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க எட்டு படுக்கைகள் கொண்ட தனியறை தயார் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !