விமர்சனப் போர்
அரசர் அதிவீர ராமபாண்டியர், தான் எழுதிய 'நைடதம்' நூலை பக்கத்து நாட்டு அரசர் வரதுங்க ராமருக்கு அனுப்பினார். அவர் வேறுயாருமல்ல, அதிவீர ராம பாண்டியரின் சகோதரர். ''இது எதைப் பற்றிய நூல்?'' என்று தூதுவனிடம் கேட்டார் வரதுங்க ராமர்.''நளனைப் பற்றியது'' என்றார் தூதுவர்.உடனே வரதுங்க ராமர், ''இதை அரசியிடம் கொடுத்து, கருத்தறிந்து செல்க'' என்றார். 'வேட்டை நாயின் நடையைப் போன்றும், அடியில் இருந்து கடித்துத் தின்னும் கரும்பினைப் போன்றும் உள்ளது, நூல்' என்று ஓர் ஓலையில் விமர்சனம் எழுதிக் கொடுத்தார் அரசி. தூதுவன் கொடுத்த விமர்சன ஓலையை வாசித்த அதிவீர ராமபாண்டியர் கோபத்தில் தன் வசமிழந்தார். 'தொடக்கத்தில் வேகமாக வேட்டையாடும் நாய், பின்னர் களைத்து சோர்ந்து விடும். அடிக்கரும்பு இனிக்கும்; பிறகு நுனிக்கரும்பு இனிப்புக் குறைந்து விடும். அதுபோல நூல் தொடக்கத்தில் சுவையும், நடையில் வேகமும் கொண்டு உள்ளது. ஆனால் போகப்போக சுவையும், வேகமும் குறைந்துவிடுகிறது' என்று அரசி எழுதிய கூர்மையான விமர்சனத்தை அதிவீரராம பாண்டியரால் ஏற்க முடியவில்லை.பெருங்கோபமடைந்த அதிவீரராம பாண்டியர், உடனே வரதுங்க ராமர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார். சகோதரரின் நாட்டு எல்லையில் படையை நிறுத்தியவர், போர்ச்செய்தியைக் கூற தூதனை அனுப்பினார். அவர் திரும்ப காலதாமதமாக, அதிவீரராம பாண்டியர், வரதுங்க ராமரின் அரண்மனைக்குள் சென்றார். அங்கே அவரது சகோதரர் பாடல் பாடியபடி சிவபூஜை செய்து கொண்டிருந்தார்.அப்பாடலில் மனத்தைப் பறிகொடுத்தார் அதிவீரராம பாண்டியர். விமர்சனத்திற்காக சகோதரர் மீது போர்தொடுத்தோமே என வருந்தி, அவரிடம் மன்னிப்புக் கேட்டார். அப்போது அங்கு வந்த அதிவீர ராம பாண்டியரின் அண்ணி,'செங்கதிரோன் மைந்தனையும் தென்னிலங்கை வேந்தனையும்பஞ்சவரில் பார்த்தனையும் பாராதே விஞ்சுவிரதமே பூண்டு இந்த மேதினியை ஆண்டபரதனையும் ராமனையும் பார்' என்றார். அதாவது, 'சுக்ரீவன் தன் சகோதரன் வாலியுடன் சண்டையிட்டு, அவன் இறக்கக் காரணமானான். விபீடணன் தன் சகோதரன் ராவணனை விட்டு ராமனிடம் சேர்ந்தான். இலங்கையும் ராவணனும் அழியக் காரணமானான். அர்ஜுனன் தன் பெரியப்பா மகன்கள், கர்ணனுடன் சண்டையிட்டான். பரதனோ அண்ணன் ராமன் வனவாசம் சென்றவுடன், தானும் தவ வேடம் பூண்டு, அண்ணனின் பாதுகையை (காலணி) வைத்து அரசாண்டான். ராமன் திரும்பி வந்ததும் அவனிடமே நாட்டை ஒப்படைத்தான். நீ பரதனைப் போல் இருக்க வேண்டும்' என்றாள் அதிவீரராம பாண்டியரின் அண்ணியார்.- ராஜசியாமளா