உள்ளூர் செய்திகள்

கட்-காப்பி-பேஸ்ட் பிதாமகர்

மேதமை''பத்மஸ்ரீ விருதுகளோட அறிவிப்பைச் செய்யும்போது, இந்தியாவில் 'கொண்டாடப்படாத ஹீரோக்கள்'னு அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு வார்த்தை சொன்னார் மிஸ். எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா மிஸ்?”உமா மிஸ்ஸோடு மதியம் சாப்பிடும்போது இந்தப் பேச்சு ஆரம்பிச்சுது. உமா மிஸ், என் முகத்தைப் பார்த்தபடி,“ஏன் அப்படி கேக்கறே? நிறைய பேரோட பங்களிப்பை நாம் ரொம்ப சாதாரணமா எடுத்துக்கறோம். அல்லது கவனிக்கறதே இல்லை. ஆனால், அவங்க தான் நம்மோட வாழ்க்கையையே எளிமைப்படுத்தியிருப்பாங்க. பியூஷ் கோயலும் அதைத்தான் சொல்லியிருக்கார். இந்த முறை பத்மஸ்ரீ விருது வாங்கின பலர் இப்படி 'அன்சங் ஹீரோஸ்' தான்.”“எப்படி மிஸ் வெளியே தெரியாமல் போகும்? அப்படி தெரியாமல் போன விஷயம் ஒண்ணு சொல்லுங்க.”“காரணங்கள் பல இருக்கு. அதைப் பேசறதுல அர்த்தமே இல்லை. உதாரணம் கேட்டீயே. அதுக்குச் சொல்றேன். நீ கம்ப்யூட்டர்ல கட், காப்பி, பேஸ்ட் செஞ்சிருக்கியா?”“ஓ! நிறைய தடவை செஞ்சுருக்கேன் மிஸ்?”“அதை யார் கண்டுபிடிச்சாங்க, தெரியுமா?”“யார் கண்டுபிடிச்சாங்களா? அது கம்ப்யூட்டர்லேயே இருக்கிற வசதி தானே, மிஸ்?”“ஆனால், அதை யாரோ ஒருத்தர் கண்டுபிடிச்சு, கம்ப்யூட்டர்ல சேர்த்துருக்கணும், இல்லையா?”நான் இப்படி யோசித்ததில்லை. கணினியும், அதில் இடம்பெறும் பல்வேறு வசதிகளும் அம்சங்களும் ஏதோ இயற்கையாகத் தோன்றியவை என்ற எண்ணம் தான் எனக்கு இருந்தது. அல்லது, உண்மையில் இப்படி யாரோ ஒருவர் அதை உருவாக்கியிருப்பார் என்றே மனத்தில் உறைக்கவில்லை.“நான் இப்படி யோசிச்சதே இல்லை மிஸ். யார் மிஸ், 'கட்- காப்பி, -பேஸ்ட்டை'(Cut, Copy, Paste) உருவாக்கினது?”“லேரி டெஸ்லர்னு ஒரு கணினி நிபுணர் தான் இதைச் செஞ்சார். அவர் தான் 'ஃபைண்ட் அண்டு- ரீப்ளேஸ்'(Find and Replace) வசதியையும் ஏற்படுத்தியவர்.”“ஓ!”“இதனோடு முக்கியத்துவம் என்னன்னு இன்னிக்கு யாருமே யோசிக்க மாட்டோம். கவனிக்க மாட்டோம். அந்தக் காலத்துக் கம்ப்யூட்டரை யோசிச்சுப் பார்த்தா தான் இதனோடு முக்கியத்துவம் புரியும்.நான் சொல்றது 1970ஆம் ஆண்டுகள்னு வெச்சுக்கோ. கணினி படிப்படியாக பரவலாகி வருது. ஏதாவது ஒரு கட்டுரையைத் தட்டச்சு செய்யணும்னா, ஒவ்வொருமுறையும் ஆரம்பத்துலேருந்து முழுசா டைப் செய்யணும். ஒவ்வொரு முறையும் இதைச் செய்யணும். ஒரு இடத்துலேருந்து இன்னொரு இடத்துக்கு பிரதி எடுத்துக்கிட்டுப் போகமுடியாது.அப்போதான், லேரி டெஸ்லர் இதைக் கண்டுபிடிச்சார். அவர் அந்தக் காலத்துல அச்சகத்துல நடைமுறையில இருந்த ஒரு பழக்கத்தைப் பார்த்திருக்கார். ஒரு இடத்துலேருந்து இன்னொரு இடத்துக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியை மாற்றணும்னா, அதை வெட்டி எடுத்து, இன்னொரு பகுதியில ஒட்டுவாங்க. இன்னிக்கு இருக்கற லேசர் பிரின்டருக்கு முன்னால, 'புரோமைடு'ல பக்கங்களை வெட்டி ஒட்டற பழக்கம் இருந்துச்சு. அதைப் பார்த்துத் தான், லேரி டெஸ்லர், கணினியில் இந்த வசதியைக் கொண்டுவரணும்னு முயற்சி செய்து வெற்றியும் பெற்றார். இதனால் என்ன பலன் தெரியுமா?”“சொல்லுங்க மிஸ்.”“மீண்டும் ஒருமுறை டைப் பண்ண வேண்டாம். அது எவ்வளவு பெரிய விடுதலை தெரியுமா? எங்கே ஒரு பத்தி இருந்தாலும், அதை அப்படியே வெட்டி எடுத்து, இன்னொரு கம்ப்யூட்டருக்கோ, செயலிகளுக்கோ சுலபமாக அனுப்பலாம். எவ்வளவு மனித உழைப்பு மிச்சம் தெரியுமா? இன்னிக்கு இணையம் முழுக்க, ஏராளமான பிரதிகள் உலா வருதுன்னா, அதுக்கு அடிப்படை டெஸ்லர். அவரோட கண்டுபிடிப்பு. எந்த மேட்டரையும் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்து, இன்னொரு இடத்துல ஒட்டலாம், அனுப்பிவைக்கலாம். அதேபோல், ஃபைண்ட் அண்டு ரீப்ளேஸ் வசதி. ஒரு பெரிய 'வேர்டு' கோப்பு இருக்குன்னு வெச்சுக்கோ. அதுல குறிப்பிட்ட சொற்கள் தப்பா போச்சுன்னா, ஒவ்வொரு இடமாகப் போய் திருத்தவேண்டாம். சர்ச் செய்து, குறிப்பிட்ட சொல்லை மட்டும் கண்டுபிடிச்சு, அதை மட்டும் டாக்குமென்ட் முழுக்க மாத்த முடியும். இதுவும் டெஸ்லரோ கண்டுபிடிப்பு தான்.இன்னிக்கு நாம கணினியில் சொல்றோமே 'கிராஃபிக்கல் யூசர் இன்டர்ஃபேஸ்,' அதாவது நம்மோட கணினித் திரை, இவ்வளவு சுறுசுறுப்பா, இவ்வளவு பவர்ஃபுல்லா இருக்குன்னா அதுக்கு அடித்தளமிட்டவர் இந்த லேரி டெஸ்லர் தான். மெளஸைக் கொண்டு, கணினித் திரையில் இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் இவர்.இவ்வளவு முயற்சிகளுக்குச் சொந்தக்காரரான லேரி டெஸ்லர் பெரிய புகழ் அடையலை. அதுக்காக அவர் கவலைப்பட்ட மாதிரியும் தெரியலை. தன் வேலையைச் செஞ்சுக்கிட்டே போயிட்டார்.இன்னிக்கு அவர் கண்டுபிடிச்ச 'கட், -காப்பி,- பேஸ்ட்' இல்லாமல் உலகமே இல்லை. இணைய உலகமும் தொழில்நுட்ப உலகமும் பரந்து விரிஞ்சிருக்குன்னா, அவை அனைத்துலேயும் லேரி டெஸ்லருடைய பேர் மறைஞ்சிருக்கு. அவரோட முயற்சி உள்ளுக்குள்ளே இருக்கு. இதுதான் உண்மையான மேதமைங்கறது. கணினி உலகத்தோட ஒரு பிரச்னையை மிக சுலபமாகத் தீர்த்து வெச்சுட்டார். அதனால், அது அடைந்த வேகத்துக்கும் பாய்ச்சலுக்கும் துணை செய்திருக்கிறார். இவர் நிச்சயம் ஒரு 'அன்சங்' ஹீரோ தானே?”உமா மிஸ் சொல்லி நிறுத்தியபோது, என் மனத்தில் நான் மிக இயல்பாக பயன்படுத்திய 'கட்-, காப்பி,- பேஸ்ட்' ஷார்ட்கட் ஞாபகம் வந்தது. இதுபோல் இன்னும் பல கணினி 'ஷார்ட்-கட்'டுகள் ஞாபகம் வந்தன. அவற்றையெல்லாம் நிச்சயம் யாரோ ஒரு முகமறியாத மனிதர் தான் உருவாக்கியிருக்க வேண்டும். அவர்கள் யாரென்று கண்டுபிடித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று மனத்தில் முடிச்சுப் போட்டுக்கொண்டேன்.“ஏதேனும் ஒரு விஷயம் முடியவே முடியாது, மிகமிகக் கடினம், சாத்தியமே இல்லை என்று யாராவது சொல்வதைக் கேட்டால், அது எனக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொள்வேன். அதை முடித்துக் காட்டுவேன். அதுதான் என்னுடைய இயல்பு.”லேரி டெஸ்லர்தோற்றம்: 24.4.1945 மறைவு: 16.2.2020


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !