உள்ளூர் செய்திகள்

துப்பறிவோமா!

எங்கள் நாலு பேருக்கும் (மாலு, பாலு, வாலு, ஞாநி மாமா) துப்பறியும் கதை என்றால், ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஏதாவது சின்ன 'க்ளூ' இருந்தால் கூட, அதிலிருந்து பெரிதாக ஏதாவது கற்பனை செய்வோம். மேசையில் டோலோ- 650 மாத்திரை அட்டை இருக்கும். அதைப் பார்த்ததும் மாமா கேட்பார், “நேற்று முழுக்க தலைவலியா?”. அதெப்படி, நேற்று முழுக்க என்று தெரியும்? புது மாத்திரை அட்டையில் மூன்று மாத்திரைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்று வேளை சாப்பிட்டிருக்கக் கூடும். இந்த மாதிரி ஊகிப்பது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் போகலாம். ஆனால், இப்படி சின்னச் சின்ன அடையாளங்களை வைத்து, ஊகிப்பதுதான் ஒரு துப்பறியும் நிபுணரின் வேலை.நாங்கள் யாரும், அசல் துப்பறிவாளரைப் பார்த்ததில்லை. ஆனால், ஷெர்லாக் ஹோம்சும், ஹெர்குலே போய்ரோவும், எங்களுக்கு மிகவும் பரிச்சயமான கற்பனை டிடெக்டிவ்கள். மாமா இந்த டிடெக்டிவ்கள் வரும் நிறைய கதைகளை, எங்களுக்குப் படித்துச் சொல்லுவார். அதில் ஷெர்லாக் ஹோம்ஸ்தான், ஒரு புது நபரைப் பார்த்த சிறிது நேரத்திலேயே, அவர் என்ன வேலை பார்க்கிறார், இப்போது எங்கிருந்து வருகிறார் என்றெல்லாம் சொல்லும், ஆற்றல் உடையவர். எல்லாமே அடையாளங்களை வைத்து ஊகிப்பதுதான். ஒருவர் அணிந்து வந்திருக்கும் ஷூவைப் பார்த்து, அவர் சேறும் சகதியுமான இடத்தில் தொடர்ந்து வேலை பார்ப்பவர் என்று சொல்லிவிடுவார். எப்படி ஷூவை சுத்தப்படுத்தும்போது, அதில் ஒட்டும் மண்ணை சுரண்டி எடுக்கையில், ஷூவில் சின்னச் சின்ன கீறல்கள், வெட்டுகள் விழுந்திருக்கின்றன. அதை வைத்து ஊகிப்பார் ஷெர்லாக்.இது, எனக்கும் பாலுவுக்கும் நல்ல பொழுதுபோக்காக இருக்கும். அப்பாவிடம் பாக்கு வாசனை தூக்கலாக வந்தால், அதற்கு முன்னால் சிகரெட் பிடித்திருக்கிறார் என்று தெரிந்துவிடும். அம்மா கூட ஒரு டிடெக்டிவ்தான். “என்ன மாலு?” என்று அம்மா கேட்கும்போது, என் முகத்தில் கொஞ்சம் அசட்டுத்தனமான புன்னகை இருந்தால், உடனே சொல்லிவிடுவார் ஏதோ விஷமம் செய்துவிட்டு வந்திருக்கிறேன் என்று. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், ஆர்தர் கானன் டாயில் என்பவரால் எழுதப்பட்டு, நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஹெர்குலெ போய்ரோ கதைகளை, அகாதா கிறிஸ்டி எழுதி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிறது. துப்பறியும் கதைகளில் முக்கிய பாத்திரமாக டிடெக்டிவை வைக்காமல், ஒரு வழக்கறிஞரை வைத்து எழுதியவர், ஏர்ல் ஸான்லி கார்டனர். அவர் உருவாக்கிய வழக்கறிஞர் பெரி மேசன், கோர்ட்டில் விசாரணையையே மாற்றி, அசல் குற்றவாளி யார் என்று அம்பலப்படுத்துவார். இந்த மூன்று படைப்புகளும்தான், அதற்குப் பின்னால் எழுதப்பட்ட பல துப்பறியும் கதைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றன. வங்காள சினிமா இயக்குநர் சத்யஜித் ரே, சிறுவர்களுக்காக எழுதிய கதைகளை, மாமாதான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கூட ஒரு துப்பறியும் நிபுணர் பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். ஃபெலூடா என்று பெயர். ரேவுக்கும், ஷெர்லாக் ஹோம்சை மிகவும் பிடிக்கும். எனவே, ஃபெலூடாவையும், ஷெர்லாக் மாதிரியே அமைத்திருக்கிறார்.இப்போது, ஷெர்லாக் ஹோம்ஸ், ஃபெலூடா கதைகளை, தமிழிலும் மொழிபெயர்த்து விட்டார்கள்.தமிழில், அசலாக துப்பறியும் கதைகள் இல்லையா என்று, ஒரு முறை மாமாவிடம் கேட்டேன். ஏராளமானவர்களை அவர் அறிமுகப்படுத்தினார். தமிழ்வாணன், சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா என்று பலரும் துப்பறியும் கதை எழுதியிருக்கிறார்கள். அதில் எனக்குப் பிடித்தது தமிழ்வாணனின் சங்கர்லாலும், சுஜாதாவின் கணேஷும்தான். ( வசந்த்தை பிடிக்காது. எப்போதும் அசடு வழியும் கேரக்டர் அது.) கணேஷ், உண்மையில் டிடெக்டிவ் இல்லை. பெரி மேசன் மாதிரி வழக்கறிஞர்தான்.ரொம்ப வித்தியாசமான ஒரு டிடெக்டிவை, பழைய எழுத்தாளர் தேவன் உருவாக்கியதாக மாமா சொன்னார். துப்பறியும் சாம்பு என்று பெயர். சாம்பு தப்புத்தப்பாக ஏதாவது செய்வார். ஆனால், அந்தத் தப்பினாலேயே, அசல் குற்றவாளிகள் சிக்கிக் கொள்வார்கள். சாம்பு திட்டமிட்டு அப்படி செய்ததாக, எல்லாரும் நினைத்துப் பாராட்டுவார்கள். (நம்ம பாலு மாதிரி என்கிறது வாலு.) துப்பறியும் கதைகளை எழுதுபவர்களும், கொஞ்சம் வித்தியாசமான மனிதர்களாகத்தான் இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. (எழுத்தாளர்களே கொஞ்சம் ஒரு மாதிரியானவர்கள்தான் என்கிறார் மாமா.) தமிழ்வாணன், அவர் உருவாக்கிய சங்கர்லால் மாதிரியே, கறுப்புக் கண்ணாடி, தொப்பி போட்டுக் கொண்டார். ஷெர்லாக் ஹோம்சை உருவாக்கிய ஆர்தர் கானன் டாயிலுக்கு, மறுபிறவி, ஆவிகளுடன் பேசுவது போன்றவற்றில் நம்பிக்கை இருந்திருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் அகாதா கிறிஸ்டி, தன் 36வது வயதில் கணவருடன் ஏற்பட்ட வருத்தத்தினால், திடீரென காணாமல் போய்விட்டார். அவர் எங்கே போனார் என்று கண்டுபிடிக்க விமானங்களையெல்லாம் பயன்படுத்தித் தேடியிருக்கிறார்கள். பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்கள். கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு அறிவித்தார்கள். ஆவியுடன் பேசுபவரிடம் சொல்லி, அகாதாவைக் கண்டுபிடித்துத் தரும்படி, ஆவிகளிடம் கேட்கும்படி ஆர்தர் கானன் டாயில் கேட்டிருக்கிறார். கடைசியில், 11 நாட்கள் கழித்து, அவர் ஒரு ஹோட்டலில் வேறு பெயரில் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஆனால், இன்றுவரை அவர், அந்த 11 நாட்கள் எங்கே போனார், என்ன செய்தார், ஏன் போனார் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவரும் சொல்ல மறுத்துவிட்டார். யாராலும் என்ன நடந்தது என்று துப்பறிய முடியவில்லை. “இப்போது எந்தப் பிரபலமும் அப்படிக் காணாமல் போகமுடியாது. செல்போன்,டெபிட் கார்டையெல்லாம் வைத்தே கண்டுபிடித்துவிடலாம்” என்றான் பாலு. “அதையெல்லாம் உபயோகிக்காத பிரபலங்கள் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து மறைந்த சினிமா இயக்குநர் பாலுமகேந்திராவும், இப்போதுள்ள குரலிசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவும் செல்போனே வைத்துக் கொள்ளவில்லை.” என்றார் மாமா.“அமெரிக்காவில் விமானத்தைக் கடத்திய ஒரு குற்றவாளியை, 45 ஆண்டுகளாகியும், இன்னும் கண்டுபிடிக்கவில்லை.” என்றது வாலு. கூப்பர் என்பவன், போர்ட்லாண்டிலிருந்து சியாட்டிலுக்குப் போகும் விமானத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு, ஒருபணிப்பெண்ணை அழைத்து, தன் பக்கத்தில் உட்காரவைத்தான். அவரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தான். அதில் 'என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது. சியாட்டிலில் என்னிடம் 2 லட்சம் டாலரும் கொஞ்சம் பாராசூட்டும் தரவேண்டும். இல்லாவிட்டால் விமானத்தை வெடித்துவிடுவேன்.' என்று எழுதியிருந்தது. அதன்படியே செய்தார்கள். எல்லா பயணிகளையும் இறக்கி அனுப்பிவிட்டு, விமானத்தை மெக்சிகோ நோக்கிப் பறக்கச் சொன்னான் கூப்பர். விமானம் பறக்கத் தொடங்கியதும், ஒரு மலைப்பகுதி அருகே பணத்துடன் பாராசூட்டில் குதித்த கூப்பரை இன்று வரை, கண்டுபிடிக்க முடியவில்லை. “நான் பெரியவனாகி, டிடெக்டிவ் ஆனதும் இந்தமாதிரி கண்டுபிடிக்காமல் மிஞ்சியிருக்கும் மர்மங்களையெல்லாம் துப்பறிந்துவிடுவேன்.” என்றான் பாலு. இந்த முறை நாங்கள் யாரும் சிரிக்கவில்லை. ஏனென்றால் எங்கள் எல்லாருக்குமே என்றைக்காவது சிறந்த துப்பறியும் நிபுணர்களாகி விடுவோம் என்ற ஆசை இருக்கிறது.“நாம் மூன்று பேரும் சேர்ந்து, 'லு-த்ரீ' டிடெக்டிவ் ஏஜன்சி நடத்துவோம்” என்று பாலு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிறான்.இப்போதைக்கு, என் பிரவுன் கலர் துப்பட்டாவை எங்கே வைத்தேன் என்று கண்டுபிடிக்க வேண்டும். அடிக்கடி காணாமல் போய்விடுகிறது.வாலுபீடியா 1: அகாதா கிறிஸ்டியின் புத்தகங்கள், இதுவரை 200 கோடி பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கின்றன. மொத்தம் 103 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிய, ஆர்தர் கானன் டாயில் மருத்துவம் படித்தவர். மருத்துவர் தொழிலில் வெற்றிபெற முடியாமல் எழுத்தாளராகிவிட்டார்.வாலுபீடியா 2: பெரி மேசன் நாவல்களை எழுதிய ஏர்ல் ஸ்டான்லி கார்டனர் மொத்தம் ஏழு புனைப்பெயர்களில் புத்தகங்களை எழுதியிருக்கிறார். சத்யஜித் ரேவின் ஃபெலூடா கதைகளில், 15 வங்காள திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !