ஞாநி எழுதும் மாலுவின் டயரி (34) - தீ!
பாலு, வாலு, ஞாநி மாமா, நான் எல்லாரும் என் அறையில் நேற்று இரவு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. ஒரே இருட்டு. என் மேசை இழுப்பறையிலிருந்து ஒரு மெழுகுவர்த்தியையும் தீப்பெட்டியையும் எடுத்து பாலுவிடம் கொடுத்தேன். அவன் அதை ஏற்றிவிட்டு மாமாவிடம் கேட்டான்.“மாமா, இந்த நெருப்பிலிருந்து வெளிச்சமும் வருது. வெப்பமும் வருது. யார் இந்த நெருப்பை முதன்முதல்ல கண்டுபிடிச்சாங்க?”மாமா சிரித்தார். “அதைக் கண்டுபிடிச்சவங்க பேரெல்லாம் யாருக்கும் தெரியாது. நெருப்பைப் பயன்படுத்தலாம்னு மனித குலம் கண்டுபிடிச்சு பத்து லட்சம் வருஷம் ஆகுதுன்னு கணக்கிட்டிருக்காங்க. நான்கு லட்சம் வருஷம் முன்னே இருந்த நம்முடைய மூதாதை மனிதர்களான 'ஹோமோ எரெக்டஸ்' நெருப்பை விதவிதமா பயன்படுத்தி இருக்காங்கன்னு ஆராய்ச்சி அறிஞர்கள் சொல்றாங்க. அந்த முதல் மனுஷன் பேரையெல்லாம் யாரும் குறிச்சு வெக்க அப்ப வசதியில்ல. அந்த மனுஷனுக்கு பெயர் இருந்துச்சாங்கறதே ஒரு கற்பனைதான்” என்றார்.“அப்ப நெருப்பை அவங்க பயன்படுத்தினாங்கன்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க?” என்று கேட்டேன்.“கிடைச்ச பழைய எலும்புகள்ல எரிச்ச அடையாளங்கள் இருந்திருக்கு. தவிர நெருப்பைப் பயன்படுத்தி சமைக்க ஆரம்பிச்ச பிறகுதான், நமக்கு காய்கள், இறைச்சி எல்லாத்துலயும் இருக்கற நிறைய சத்துகள் கிடைச்சிருக்கு. அதுக்கப்புறம்தான் மனிதனோட மூளையோட சைஸே பெரிசாக ஆரம்பிச்சிருக்கு. நெருப்பைப் பயன்படுத்தறதுக்கு முன்னாடி, ஆதி மனிதன் குரங்குகளைப் போல மரத்து மேலதான் வசிச்சிருக்கான். நெருப்புக் கிடைச்ச பிறகுதான் தரையில் வந்து மீதி விலங்குகளைப் பத்தின பயம் இல்லாம வாழமுடிஞ்சிருக்கு.”உடனே பாலு , “விலங்குகள் நெருப்புக்குப் பயப்படலாம். ஆனா, மனுஷன் நெருப்புகிட்டயும் இல்ல பயப்படவேண்டியிருக்கு. தொட்டா சுடுது. தள்ளிப் போய்ட்டா குளிர் காயமுடியல” என்றான். “இதை வெச்சு திருவள்ளுவர் ஒரு அருமையான குறள் எழுதியிருக்கார். 'அகலாது அணுகாது தீக் காய்வார் போல்க, இகல்வேந்தர் சேர்ந்தொழுகுவார்'. அதிகாரத்துல இருக்கறவங்க கிட்ட எப்பிடிப் பழகணும்னா குளிருக்கு தீக் காய்வது போல ரொம்ப நெருக்கமாவும் போய்டக் கூடாது. ரொம்ப விலகியும் போய்டக் கூடாதுன்னு சொல்றார்”என்றார் மாமா.“பிரமாதமான குறள்” என்று பாலு கைதட்டினான். அந்த தட்டலோட வீச்சுல மேசையில எரிந்துகொண்டிருந்த மெழுகுவத்தி கீழே விழுந்தது. விழுந்த இடத்துல ஒரு மாதத்து தினசரி பேப்பர் இருந்தது. ஒரு பேப்பர் முனை தீப்பற்றிய உடனே பாலு பதறினான். “அந்தக் கட்டுல 'பட்டம்' இஷ்யூஸ் இருக்கா?” என்றான். “பட்டத்தையெல்லாம் வந்த உடனே தனியா எடுத்து ஃபைல் பண்ணிருவேன்” என்றேன். நெருப்பு திகுதிகு என்று எரிய ஆரம்பித்தது. “இதை எப்பிடி அணைக்கறது? தண்ணி ஊத்தினா பேப்பர் நாசமாயிடுமே” என்றான் பாலு. மாமா சட்டென்று கட்டிலின் மேல் இருந்த தடியான போர்வையை எடுத்து பேப்பர் கட்டு மேல் வைத்து மூடி அழுத்தினார். நெருப்பு அணைந்துவிட்டது.“நெருப்பை அணைக்க எல்லா நேரத்துலயும் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது. நம்ம உடையில தீப்பிடிச்சா உடனே தரையில படுத்து வேகமா உருளணும். போர்வை எடுத்து டைட்டா சுத்தினா, நெருப்பு அணைஞ்சிடும். காத்துல இருக்கற ஆக்சிஜன் கிடைக்காட்டி நெருப்பு எரியாது” என்றார் மாமா. அந்த நேரத்தில் மின்சாரம் மறுபடி வந்தது. எல்லாரும் நிம்மதியானோம். “இது சின்ன நெருப்பு. சட்டுனு அணைச்சுட்டோம். பெரிய தீவிபத்துகள் வந்தா ஃபயர் சர்வீஸைத்தான் கூப்பிடணும்” என்றான் பாலு.“ஃபயர் சர்வீஸ் எப்போ இருந்து உலகத்துல இருக்கு?” என்று கேட்டேன்.“நீரோ மன்னன் ஆட்சியில ரோம் நகரம் தீப்பற்றி எரிஞ்சுதில்லியா? புது நகரத்தை உருவாக்கறப்பவே, பொதுமக்கள்ல இருந்து கொஞ்சம் தொண்டர்களைத் தேர்ந்தெடுத்து, தீப் பிடிச்சா என்ன செய்யணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. சார்லஸோட ஆட்சியில 1666ல லண்டன்ல நடந்த தீ விபத்து ரொம்பக் கொடூரமானது. லண்டன்ல ஒரு பகுதியே சாம்பலாயிடுச்சு. 14 ஆயிரம் வீடுகள் அழிஞ்சுபோச்சு. அப்ப லண்டன்ல குடியிருந்த 80 ஆயிரம் பேர்ல 70 ஆயிரம் பேர் இதுல பாதிக்கப்பட்டிருக்காங்க. செத்தவங்க கணக்கு என்னன்னே தெரியல.”“அப்பலாம் எப்பிடி தீயை அணைப்பாங்க?” என்றான் பாலு.“தண்ணீர்தான் ஒரே வழி. அது தவிர தீ பரவாம தடுக்கறதுக்கு தீப்பிடிச்ச கட்டடத்துக்கு பக்கத்து கட்டடத்தையே இடிச்சுருவாங்க. பீரங்கி வெச்சு வெடி மருந்தால நிறைய கட்டடங்களைத் தகர்த்துதான் தீ பரவாம கட்டுப்படுத்தியிருக்காங்க. அப்பலாம் லண்டன்ல எல்லா கட்டடமும் மரப்பலகையில கட்டினது. இந்த விபத்துக்குப் பிறகுதான் அதிகமா செங்கல் கட்டடம் கட்ட ஆரம்பிச்சாங்க” என்றார் மாமா.“நம்ம ஊர்ல அவ்வளவு பெரிய தீ விபத்துலாம் நடக்கல இல்லியா?” என்று கேட்டேன். “நான் பார்த்து சென்னையில மூணு பெரிய தீ விபத்து நடந்திருக்கு. ஒண்ணு எல்.ஐ.சி. கட்டடத்துல. அடுத்தது பழைய ஸ்பென்சர் பில்டிங்ல. மூணாவது சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்துல இருந்த மூர்மார்க்கெட்ல” என்றார் மாமா. “மூர்மார்க்கெட் ரொம்ப பிரபலமான இடம் இல்ல?”“ஆமா. 1898ல இருந்து 87 வருஷம் இயங்கின மார்க்கெட் அது. அங்கே கிடைக்காத பொருளே இருக்காது. நிறைய அபூர்வமான பழைய புத்தகங்கள் கிடைக்கும். வீட்டுக்கு வேண்டிய எல்லாவிதமான பொருட்களும் கம்மி விலையிலயே கிடைக்கும்.”“அது எப்பிடித் தீப்பிடிச்சது?”“அது இன்னி வரைக்கும் ஒரு மர்மம்தான். அந்த இடத்தை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தை விரிவுபடுத்தறதுக்காக கேட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா மூர்மார்க்கெட் வியாபாரிகள் மறுத்துகிட்டே இருந்தாங்க. கடைசியில் தீயில நாசமானதும் அந்த இடத்துல இப்ப சப்அர்பன் ரயில் நிலையம் கட்டியாச்சு. மூர்மார்க்கெட் வியாபாரிகளுக்குப் பக்கத்துல சின்னதா ஒரு பில்டிங் கட்டிக் குடுத்திருக்கு. ஆனா பழைய மவுசு அதுக்கு இப்ப இல்ல”என்றார் மாமா. பாலு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். “என்ன பாலு யோசிக்கறே? பெரியவனானதும் ஃபயர் சர்வீஸ் வேலைக்குப் போகலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டியா?” என்றேன். “இல்லை. நீரோ காலத்துலருந்து தீயணைக்க தொண்டர் படைய உருவாக்கியிருக்காங்க. நானும் ஒரு தொண்டரா போய் வேலை செய்யலாமான்னு யோசிக்கறேன்” என்றான் பாலு.“இந்தியால அந்த மாதிரி வாலன்ட்டியர்களை எடுக்கற வழக்கம் இல்ல. போன வருஷம்தான் மும்பையில 70 ஆயிரம் பொது மக்களுக்கு தீயணைப்புப் பயிற்சி கொடுக்கப் போறோம்னு அறிவிச்சாங்க. எந்த அளவுக்கு நடந்ததுன்னு தெரியல. ஆனா பல மேலை நாடுகள்ல கல்லூரி மாணவர்கள், பொது மக்கள்லாம் வாலன்ட்டியரா இருக்காங்க. அமெரிக்கால தீயணைப்பு வீரர்கள்ல 69 சதவீதம் பேர் வாலன்ட்டியர்ஸ்தான். பெஞ்சமின் ஃபிராங்க்ளின் காலத்துலருந்தே அதை அப்படி உருவாக்கிட்டாங்க” என்றார் மாமா.“தமிழ்நாட்டுலயும் அப்படிச் செய்யணும். நான் முதலமைச்சருக்கு இதைப் பத்தி லெட்டர் எழுதப் போறேன்” என்றான் பாலு. “அவங்கதான் எப்பவும் லெட்டர் எழுதுவாங்க. அவங்களுக்கே லெட்டரா?” என்றது வாலு. எல்லாரும் சிரித்தோம்.“எழுது பாலு. ஏதாவது நல்லது நடந்தா சரி” என்றார் மாமா.வாலுபீடியா 1: பஞ்சபூதங்களான காற்று, நீர், நிலம், வெளி, நெருப்பு ஆகியவற்றில் முதல் நான்குக்கும் பல பல்கலைக் கழகங்களில் தனியான கல்விப் புலம் இருக்கிறது. ஆனால் நெருப்பைப் பற்றிப் படிப்பதற்கென்று கல்வித்துறையில் தனிப் புலம் கிடையாது. இயற்பியலிலும் வேதியியலிலுமே அது கலந்திருக்கிறது.வாலுபீடியா 2: இப்போது நாம் பயன்படுத்தும் தீக்குச்சி வடிவம், 1826லிருந்து இருந்து வருகிறது. தீப்பெட்டி மீது இருக்கும் லேபிள்களை சேகரிக்கும் பொழுதுபோக்குக்கு ஆங்கிலத்தில் ஃபிலுமெனி (phillumeny) என்று பெயர்.