தோண்டிக் கண்ட மேடு
பொதிகை என்பதை மலை என்றோ, தொலைக்காட்சி அலைவரிசை என்றோ எல்லாரும் அறிந்திருப்பார்கள். ஆனால், பொதுகை? தமிழ்நாட்டின் பழைய பாரம்பரியத்தின் ஆச்சரியகரமான ஆதாரம்தான் பொதுகை.தொல்பொருள் ஆய்வில் பிரபலம் ஆன அரிக்கமேடு, முன்பு பொதுகைப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. பழைய காலத்திலேயே ஏராளமான நகரங்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. கடல் கொள்ளுதல் போன்ற இயற்கை அழிவுகளால் நிறைய நகரங்கள் அழிந்து போயுள்ளன. அப்படி ஒரு நகரம்தான் அரிக்கமேடு. புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரியாங்குப்பத்து ஆற்றின் கரையில் மண்மூடிக் கிடந்த அதைத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டிக் கண்டுபிடித்தனர். தோண்டத் தோண்ட ஆச்சரியம். ரோம் நகர வணிகர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்தது எல்லாம் அந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்தது. அந்தக் காலத்திலேயே நாம் கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கியதை சுட்ட செங்கற்களால் ஆன கட்டடங்கள் தெரிவித்தன. பளிங்கு, பவழம் போன்றவற்றால் செய்த மணிகள், உருவங்கள் செதுக்கிய பதக்கங்கள், பொன் மணிகள், சங்கு வளையல்கள், ஆபரணங்கள் என ஏராளமான பொருட்கள் அங்கே கிடைத்தன. தமிழர்களின் பாரம்பரியப் பெருமையை உயரத்தில் ஏற்றிக் காட்டிய ஊர்களில் ஒன்று அரிக்கமேடு. பொருத்தமான பெயர்தானே?