உள்ளூர் செய்திகள்

விசாலமான பார்வை உண்டா உங்களுக்கு?

மனித மனம் விசித்திரமானது. நம்பிக்கைகளாலும், அனுபவத்தாலும் இது இயக்கப்படுகிறது. நாம் எதைப்பற்றியெல்லாம் அதிகம் யோசிக்கிறோமோ, எண்ணுகிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள் நம்மையும், நம் வாழ்வையும் மேம்படுத்தும். நாம் பொது விஷயங்களை எப்படிப் பார்க்கிறோம், அவற்றை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது, நம் மனதைப் பொறுத்தே அமைகிறது. மனதை விசாலமான பார்வையுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். விசாலமான பார்வை என்றால் என்ன? எது சரி, எது தவறு என்பதை பகுத்தறிந்து, உணர்ந்து கொள்ளுதல்தான். உங்களுக்கு விசாலமான பார்வை உண்டா? சில எளிய கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் அதைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன. உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்). உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் பக்கத்தில் உள்ளன. மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம். அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் அருகில் கூறியிருக்கிறோம்.1) பள்ளியில் சக நண்பர்களின் ஜாதி, மதம் போன்ற பின்னணி தெரியுமா?அ) தெரியும். இதையெல்லாம் முதலிலேயே கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஆ) இவையெல்லாம் தேவையில்லாத விவரங்கள். பெயர்களே போதுமானது. இ) தெரியும். ஆனால், அவை தற்செயலாகத் தெரிய வந்த விவரங்கள். 2) உங்கள் பள்ளியின் சத்துணவு ஆயா, கழிப்பறை சுத்தம் செய்பவர் போன்றவர்களின் பெயர்கள் தெரியுமா?அ) தெரியும். ஆ) தெரியும் என்பது மட்டுமல்ல. அவர்களைப் பார்த்தால் புன்னகைப்பேன். பேசுவேன். இ) அதெல்லாம் எனக்கு எதற்கு? நேரில் பார்க்கும்போது, ஒதுங்கிச் செல்வேன். 3) தமிழ் மொழியைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?அ) மொழி என்பதே இரண்டாம்பட்சம்தான். அறிவியல் போதுமானது. ஆ) பெருமைப்படுவேன். பிற மொழிகள் எனக்குத் தேவையில்லை. இ) பெருமை உண்டு. பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள ஆர்வம் உண்டு. 4) உங்கள் வீட்டுக் கூடத்திற்குள் ஒருவர் தெரியாத்தனமாக காலணிகளுடன் நுழைந்து விடுகிறார். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?அ) பதற்றத்துடன் 'காலணிகளை வெளியே விடணும்' என்பேன். ஆ) புன்னகையுடன் காலணிகளை வெளியேவிட்டு வரச்சொல்வேன். இ) அவரது தவறைச் சுட்டிக் காட்டுவேன். அவர்மீது ஒருவித வெறுப்பு உண்டாகும்.5) மாற்று ஜாதியில் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அ) மாற்று ஜாதி திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஆ) திருமணம் என்பது சம்பந்தப்பட்ட இருவரின் விருப்பம். பிறர் இப்படி அடாவடியாகத் தலையிடக் கூடாது. இ) சரியல்ல என்று படுகிறது.6) பள்ளியில் மதிய உணவை யாருடன் சேர்ந்து சாப்பிடுவீர்கள்?அ) ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிறரும் சேர்ந்து கொண்டாலும் சந்தோஷம்தான். ஆ) ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள். இ) ஒரே குடியிருப்பைச் சேர்ந்தவர்கள்விடைகள்:அ ஆ இ 1) 0 8 42) 4 8 03) 0 4 84) 4 8 05) 4 8 06) 8 4 0உங்கள் மொத்த மதிப்பெண் 40லிருந்து 48 வரை என்றால், விசாலமான கண்ணோட்டம் நிறையவே இருக்கிறது. இந்தப் பரந்த மனப்பான்மையை மாற்றிக் கொள்ளாமல் இருங்கள். உங்கள் மொத்த மதிப்பெண் 20லிருந்து 39 வரை என்றால், சிலவற்றில் தெளிவும், சிலவற்றில் குழப்பமுமாக இருக்கிறீர்கள். மேலும் தெளிவு பெற்று, பார்வையை விசாலமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மொத்த மதிப்பெண் 20க்கும் குறைவு என்றால், இவ்வளவு குறுகலான பார்வையா! தப்பு நண்பர்களே. பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள். மனிதாபிமானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். - ஆருத்ரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !