கொசுக்கடி பெருக, காரணம் தெரியுமா?
கொசுக்கள் பெருகியதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், பல்லுயிர்ச் சூழல் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.பாக்டீரியா, பூஞ்சைகள், பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என்று பல்வேறு உயிரினங்கள் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாக சேர்ந்து வாழ்வதை பல்லுயிர்ப் பெருக்கம் அல்லது பல்லுயிர்ச் சூழல் என்று அழைக்கிறோம். தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும், முக்கியமான பல்லுயிர்ச் சூழல் மண்டலங்கள். இந்தியாவிலேயே நீலகிரியைத்தான் 'உயிர்ச்சூழல் மண்டலம்' என்று முதன்முதலாக யுனெஸ்கோ அறிவித்தது. உலகில் உள்ள 12 உயிர் வளமை மிக்க மலைகளில், மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. தனித்தன்மை கொண்ட பல்வேறு உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.கொடைக்கானல், நீலகிரியிலுள்ள முக்குறுத்தி மலைப் பகுதிகளில் 'குறிஞ்சி மலர்ச் செடிகள்' பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். அதைப்போலவே சிலுவை மரம் எனும் வாட்டில் (Wattle) மரம், சேர்வராயன் மலைத் தொடரில் உள்ள ஏற்காட்டில் மட்டுமே உள்ளது. களக்காடு, ஆனைமலை போன்ற அடர்ந்த மழைக்காடுகளின் உச்சியில் வாழக்கூடிய சிங்கவால் குரங்கினம், பாறை நிறைந்த வனப் பகுதிகளில் காணப்படுகின்ற வரையாடுகள், திருகு கொம்புடைய வெளிமான்கள், சோலைக்காடுகளில் மட்டுமே வாழக்கூடிய வான்கோழி, இருவாச்சி, கானாங்கோழி, சத்தியமங்கலம் புதர்க்காடுகளில் காணப்படும் சிவிங்கிப் புலி, ஒகேனக்கல் பகுதியில் வாழும் வரகுக்கோழி, உப்புநீர் முதலை போன்ற உயிரினங்கள், தமிழ்நாட்டில் சிறப்புக்குரியதாக காணப்படுகின்றன. இந்தியாவில் இருக்கின்ற யானைகளில் 50 சதவீதம் தென்னிந்தியாவில் உள்ளன.வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியான மன்னார் வளைகுடா, தெற்கு ஆசியாவிலேயே முதன்மையான பல்லுயிர்ச் சூழல் மிக்க பகுதி. மொத்தம் 21 தீவுகளை உள்ளடக்கிய இந்தப் பகுதியில், அலையாத்திக் காடுகள், பவளப் பாறைகள், கடற்புற்கள், பறவைகள், ஆமைகள், டால்பின்கள், திமிங்கிலம், கடற்பசு என்று சுமார் 3,600 அரிய கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. சென்னைக்கு அருகே வண்டலூர் காடுகளில்கூட, புலிகள் இருந்தனவாம். ஆனால், இன்றைக்கு சத்தியமங்கலம், கொடைக்கானல், களக்காடு போன்ற பகுதிகளில் மட்டுமே புலிகள் வசிக்கின்றன. காடுகளில் ஓணான், காடை, கவுதாரி, நல்லபாம்பு, சாரைப் பாம்பு, ராஜ நாகம், மண்ணுண்ணி, மரமேறி பாம்புகளும், காட்டு முயல், காட்டுப் பூனை, காட்டுக்கோழி, உடும்பு, பச்சோந்தி, மிளாவு, நரி, கீரி, மர நாய், தேவாங்கு, வௌவால் போன்றவை குறைந்துவிட்டன. கிராமங்களில், வயல்வெளிகளில் இருந்த குருவிகள் அழிந்து வருகின்றன. தவளைகளின் அழிவால், கொசுக்களின் பெருக்கம் அதிகரித்திருக்கிறது. சத்தியமங்கலம் காட்டில் உள்ள சிவிங்கிப்புலி, ஒகேனக்கல் காட்டிலுள்ள வரகுக்கோழி, கடலோர கழிமுகப் பகுதிகளில் காணப்பட்ட உப்பு நீர் முதலை, காவேரி, பவானி போன்ற ஆற்றில் காணப்பட்ட கருப்புக் கெண்டை மற்றும் மயில் கெண்டை மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள், தமிழகத்தின் பல்லுயிர்ச் சூழலில் இருந்து காணாமல் போய்விட்டன. தேசியப் பூங்காக்களும், வனவிலங்கு சரணாலயங்களும், பல்லுயிர்ச்சூழலை பாதுகாத்து வருகின்றன. தமிழ்நாட்டில் 8 வனவிலங்கு சரணாலயங்கள், 4 தேசியப் பூங்காக்கள், 1 தேசிய கடல்வளப் பூங்கா, 3 புலிகள் சரணாலயம், 12 பறவைகள் சரணாலயம், 1 பாதுகாப்பு சரணாலயம், 3 உயிர்க்கோள காப்பகம், 1 உயிரியல் பூங்கா, 3 முதலைப் பண்ணைகள் உள்ளன.- ஜெ.பிரபாகர்