உள்ளூர் செய்திகள்

பெருவாயன் யார் தெரியுமா?

'ஆங்ங்ஙி ஆங்ஙி....' என்று மூச்சு விடாமல் கழுதை கத்துவதைக் கேட்டிருக்கீங்களா? அந்தக் குரல் ஏறக்குறைய 3 கி.மீ. தூரத்திற்கு கேட்கும்.ஈக்விடே (Equidae) என்ற குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்தது கழுதை. ஆனால் குதிரையை விடவும் வலிமையானது. இதன் அறிவியல் பெயர் ஈக்வஸ் அசினஸ் (Equus asinus). சீனாவில்தான் கழுதைகள் அதிகம் உள்ளன. ஆங்கிலத்தில் ஆண் கழுதையின் பெயர் ஜாக் (jack). பெண் கழுதை ஜென்னி (jennie). கழுதைக் குட்டி ஃபோல் (foal) என்று அழைக்கப்படுகிறது. கழுதைகள் மாடுகளைப் போலவே உழவுக்கும் பயன்பட்டன. சங்க காலத்தில் தோற்ற அரசனின் வயலில் கழுதைகளை ஏரில் பூட்டி உழுது, அவமானப்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது.'வெள்வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டிவெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்வைகல் உழவ'என்பது அவ்வையாரின் புறநானூற்றுப் பாடல் (புறம் 392). 'எதிரிகளைப் போர்க்களத்திலே விரட்டி விட்டு, அக்களத்திலே கழுதைகளை அனுப்பி, ஏர் பூட்டி வரகும், கொள்ளும் விதைக்கும் வேந்தனே, நீ வாழ்வாயாக' என்று அதியமானின் மகன் பொகுட்டெழினியைப் போற்றும் பாடலில் கழுதைகள் ஏர் உழுததை அறிய முடிகிறது. சித்தர் பாடல் ஒன்றில் கழுதை 'பெருவாயன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (பெருசாக் கத்துறதால அந்தப் பேர் வந்திருக்குமோ?)கழுதைகள் பொதி சுமக்கவும், வணிக மேம்பாட்டிற்கும் பயன்பட்டன. சங்க காலத்தில் பெண்கள் கழுதையின் மீது உப்பை ஏற்றிச் சென்று வணிகம் செய்து இருக்கிறார்கள்.கழுதைகள் வீட்டு விலங்காக வளர்க்கப்படுகின்றன. அதே நேரத்தில் காடு, பாலைவனங்களிலும் வசிக்கின்றன. கழுதைகள் வீட்டின் சுவர் ஓரம் அண்டி இருப்பவை. அதன் காரணமாக எழுந்ததுதான் 'கழுதைக் கெட்டால் குட்டிச்சுவர்' என்ற பழமொழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !