யானை பேஸ்ட்!?
'யானையெல்லாம் பல் துலக்குதா?' என்று வேடிக்கையாகச் சொல்லியிருப்போம். யானைக்குப் பல் இருக்கா? எத்தனை பல் இருக்கு தெரியுமா? தெரியலைன்னா, இந்தப்பக்கத்தில தேடிச் தெரிஞ்சுக்கோங்க!யானை பல் துலக்குவது இல்லை என்றாலும், 'யானை பற்பசை' என்று ஒன்று இருக்கிறது, தெரியுமா?'ஹைட்ரஜன் பெராக்சைட்' (Hydrogen Peroxide) என்று ஒரு வேதிப்பொருள் இருக்கிறது. இது வேதிவினையால் மாற்றம் அடையும்போது வெளிப்படும் பசை போன்ற நுரைதான் யானை பற்பசை (Elephant Toothpaste). நாமே 'யானை பற்பசை' பரிசோதனை செய்வோம்…என்னென்ன தேவை?1. 'ஹைட்ரஜன் பெராக்சைட்' திரவம் - அரை கப்2. சுத்தமான பிளாஸ்டிக் பாட்டில் - 13. உலர்ந்த ஈஸ்ட் - 1 ஸ்பூன்4. வெதுவெதுப்பான தண்ணீர் - 3 ஸ்பூன்5. பாத்திரம் துலக்கப் பயன்படும் சோப்புத் திரவம்6. சிறிய கோப்பை (கப்)7. உணவுகளில் சேர்க்கப்படும் வண்ணம்8. புனல் (Funnel)9. கையுறை10. பாதுகாப்புக் கண்ணாடி1. முதலில் ஹைட்ரஜன் பெராக்சைடை பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் ஊற்ற வேண்டும். சில சொட்டுகள் உணவுக்குப் பயன்படுத்தும் வண்ணத்தைச் (Food colour)சேருங்கள். சோப்புத் திரவத்தை ஒரு ஸ்பூன் ஊற்றுங்கள்.2. தனி கோப்பையில் வெதுவெதுப்பான தண்ணீரையும், உலர்ந்த ஈஸ்ட்டையும் கலக்கிக் கொள்ளுங்கள்.3. புனலை எடுத்து பிளாஸ்டிக் பாட்டிலின் வாய்ப்புறத்தில் வைத்து, கோப்பையில் உள்ள வெதுவெதுப்பான தண்ணீர், உலர்ந்த ஈஸ்ட் கலவையை ஊற்றுங்கள்.4. ஊற்றியதும், பற்பசையைப் பிதுக்கியது போல, பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நுரை பொங்கி வரும். அப்படி வெளிவருகிற நுரைப்பசை மெகா சைஸ் பற்பசை போல இருப்பதால் இதை 'யானை பற்பசை' (Elephant Toothpaste) என்கிறார்கள்.எரிமலை போல பொங்கி வழிகிற நுரைக்குமிழிகள் ஆக்சிஜனால் நிரப்பப்பட்டிருக்கும். இந்தச் சோதனையில் ஈஸ்ட் சிறந்த ஊக்கியாகச் செயல்பட்டு ஹைட்ரஜன் பெராக்சைடில் இருந்து ஆக்சிஜனை வேகமாக வெளியேற்றுகிறது. 'யானை பற்பசை' எதற்கும் பயன்படுவதில்லை. ஆனால், மிகக்குறைவான பொருட்களைக் கொண்டு எளிய அறிவியல் சோதனையாகப் பள்ளிகளில் செய்து காட்ட இது உதவுகிறது. ஹைட்ரஜன் பெராக்சைட் உடலில் பட்டால் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது. அதனால் கையுறை, பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து இந்தச் சோதனையை செய்யுங்கள். ஆசிரியர்கள் அல்லது பெரியவர்கள் மேற்பார்வை அவசியம். யானைக்குப் பல் இருக்கிறதா?யானையைப் பார்க்கும்போது அதன் பெரிய இரண்டு வெள்ளைத் தந்தங்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது. யானைக்கு மொத்தம் 4 பற்கள் இருக்கிறது. இந்தப் பற்கள் விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை. யானையின் ஒரு பல் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.