உள்ளூர் செய்திகள்

எம்மொழி செம்மொழி: இணையொலித் தொடர்கள்

பேச்சு வழக்கிற்கென்று சில சொற்றொடர் வகைகள் தோன்றிவிடுகின்றன. எழுதும்போது அவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், பேசும்போது பயன்படுத்துகிறோம். பேச்சுக்கே உரியவாறு சொற்களை அமைத்துக்கொள்வது நம் பழக்கம். பேச்சின் வழியே மொழி அடைகின்ற நீட்சியை இவற்றால் உணர முடியும்.நம்முடைய பேச்சை உற்று நோக்குங்கள். சில சொற்றொடர் இணைகள் தாமாக வந்து அமர்வதை உணரமுடியும்.“மழை கிழை பெஞ்சுதா?”“காசு கீசு கிடைக்குமா?”“வண்டி கிண்டி வருமா?”மேற்சொன்ன பேச்சுத் தொடர்களைப் பாருங்கள். மழை என்பதுதான் உரிய சொல். அதனோடு இணையாக 'கிழை' என்கிறோம். காசு என்பதோடு 'கீசு' என்கிறோம். வண்டி, கிண்டி வரைக்கும் வருமா என்று பொருள் கருதுவதில்லை. அதன் இணைத்தொடராகவே 'கிண்டி' என்பதைக் கருதுகிறோம்.இத்தொடர்களை “இன்று மழை கிழை பெய்யுமா?” என்று எழுத்தில் ஆள்வதில்லை. ஆனால், பேச்சில் ஒவ்வொருவரும் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இச்சொற்களுக்குப் பொருள் இல்லை. ஆனால், முதற்சொல்லின் இணையொலிப்பாக வருகிறது.இவற்றின் அமைப்பைப் பாருங்கள். இணையொலிச் சொல்லானது, குறிலுக்கு 'கி' என்றும், நெடிலுக்கு 'கீ' என்றும் தொடங்குகிறது. எ.டு: கண்ணு கிண்ணு தெரியுதா? சோறு கீறு கிடைக்குமா?பெயர்களைத்தான் இவ்வாறு சொல்கிறோமா? இல்லை. வினைச்சொற்களையும் இவ்வாறு ஆள்கிறோம். கடிச்சிக் கிடிச்சு வெச்சுடாத. உடைச்சுக் கிடைச்சுப் போடாத.பொதுவான பேச்சு வழக்கு, பலவகை இணைச்சொல் அல்லது முரண்சொல் தொடர்களால் ஆனது. ஆடு மாடு வாங்கிவிடு, நாள் கிழமை பார்க்கணும், வரவு செலவு தெரிஞ்சுக்க - இத்தகைய இணைமொழித் தொடர்கள் பல. இவற்றுக்கு உரிய பொருள்கள் இருக்கின்றன. அதனால் எழுத்திலும் பயன்படுத்துகிறோம்.அவ்வாறு இணை சேர்க்க முடியாத சொற்களுக்கு கி/கீ என்று தொடங்கும் இணையொலிச் சொற்களைச் சேர்த்து, நம் பழக்கத்தை நிறைவு செய்ய முயல்கிறோம். அதனால்தான் மொழி என்பது மனப்பழக்கம்.கி, கீ என்று தொடங்கும் சொல்லுக்கு இணையொலியை உருவாக்க முடியாது. ஏனென்றால், இணையொலிக்குத் தொடங்கவேண்டிய எழுத்திலேயே அச்சொற்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கிளி, கீரி போன்ற சொற்களுக்கு இணையொலித் தொடர்கள் இல்லை.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !