உள்ளூர் செய்திகள்

எம்மொழி செம்மொழி: சின்ன வயசுல எப்படிக் கூப்பிடறது?

தமிழ்மொழியில் உயிரினங்களுக்கு வழங்கப்படும் இளமைப் பெயர்கள் தனித்து விளங்குகின்றன. ஒவ்வோர் உயிரின் இளமை இனத்திற்கும் தனித்தனிப் பெயர். இதைத் தொல்காப்பியமே மரபியலில் வைத்துத்தான் கூறுகிறது. அந்நூலின் காலத்திற்கு முற்பட்ட பெயர் மரபாக அப்பெயர்கள் பழைமையானவையாக இருக்கின்றன. மனித இனத்தின் இளமைக்கு இரண்டே பெயர்கள்தாம். 'குழவி,' 'மகவு' ஆகியன அவை. அவ்விரண்டோடு 'பிள்ளை' என்பதும் பிற்காலத்தில் சேர்ந்தது. 'குழவி' என்பதிலிருந்துதான் 'குழந்தை' வருகிறது. 'பார்ப்பு'ம், 'பிள்ளை'யும் பறப்பவனற்றுக்கும் தவழ்வனவற்றுக்கும் இளமைப் பெயர்கள். இளமைப் பெயரை உணர்த்தும் முதற்சொல்லாகத் தொல்காப்பியம் குறிப்பிடுவது 'பார்ப்பு' என்பதைத் தான். இவ்விரண்டு பெயர்களும் தற்காலத்தில் மனித இனத்தின் பெண்பால் இளமைக்குப் பெயராயிற்று. பெண் குழந்தைகளை நாம், 'பாப்பா, புள்ளே' (பெண்பால் விழி) என்று அழைக்கிறோம். தொல்காப்பிய விளக்கப்படியே உயிரினங்களின் இளமைப் பெயர்களைப் பார்ப்போம்.கீரி, பூனை (வெருகு), எலி, அணில் ஆகியவற்றின் இளமைப் பெயர்கள் 'குட்டி'. இவற்றைப் 'பறழ்' என்றும் கூறலாம்.நாய், பன்றி, புலி, முயல் ஆகியவற்றின் இளமைக்குக் 'குருளை' என்று பெயர். நரிக்கும் 'குருளை' என்பது பொருந்தும். இவ்வைந்து உயிரினங்களுக்குக் குட்டி, பறழ் என்றாலும் பொருந்தும். மேற்சொன்ன ஐந்தில் நாய் தவிர்த்த நான்கையும் 'பிள்ளை' எனலாம்.ஆடு, குதிரை, புள்ளிமான், கலைமான் ஆகியன, 'மறி' எனப்படும். அதனால்தான் ஆடு வகையில் ஓரினத்திற்குச் 'செம்மறி ஆடு' என்றே பெயர் வந்தது.குரங்கின் இளமைப் பெயர் குட்டி. குரங்கிற்குக் குட்டி என்பது மட்டுமன்றி மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்னும் நான்கும் பொருந்தும். யானை, குதிரை, கழுதை, காட்டுமாடு, எருமை, மரை, கரடி, முதலை, ஒட்டகம் ஆகியனவற்றைக்'கன்று' எனல் வேண்டும்.இவற்றில் யானை, மாட்டு வகைகள், எருமை, மான், குரங்கு ஆகியனவற்றுக்கு மனிதர்க்கேயுரிய 'குழவி' என்ற சொல்லையும் ஆளலாம். பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி ஆகிய ஒன்பதும், தொல்காப்பியம் காட்டும் இளமைப் பெயர்கள்.மலையாளத்தில் 'குட்டி' என்பது, குழந்தையைக் குறிக்கும் சொல்லாயிற்று. பிற்காலத்தில் 'குஞ்சு' என்பது பறவை இனத்திற்கு வந்தது.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !