எம்மொழி செம்மொழி: தொடர்களில் ஒளிந்திருக்கும் பொருள்
மொழியில் சில சொற்றொடர்கள் ஒரு பொருளமைப்பில் இருக்கும். அந்தச் சொற்றொடர்கள் என்ன பொருள் தருமோ, அதற்கு நம் மனம் பழகிவிடும். அந்த அமைப்பில் பல தொடர்களைப் பல்வேறு இடங்களில் ஆக்கிப் பயன்படுத்துவோம்.எடுத்துக்காட்டாகச் சில தொடர்களைப் பார்ப்போம்.“கேட்டால் தருவாயா?”“பார்த்தால் சொல்வாயா?”“எடுத்தால் கொடுத்து விடுவாயா?”இந்தத் தொடர்களில் உள்ள வினாக்கள் ஒரு பொருளை உணர்த்துகின்றன. கேட்டால் தருவாயா என்பது வினா. இதில் இன்னொரு பொருளும் ஒளிந்திருக்கிறது. கேட்காவிட்டால் தரமாட்டாய், ஒருவேளை கேட்டுவிட்டால் தருவாயா என்பதுதான் அது.பார்க்காவிட்டால் சொல்லமாட்டாய், ஒருவேளை பார்த்தால் சொல்வாயா?எடுக்காவிட்டால் கொடுக்க முடியாதுதான், ஒருவேளை எடுத்தால் கொடுத்துவிடுவாயா?இந்தத் தொடர்களில் பொதிந்துள்ள முழுப்பொருள் இதுதான். நம் ஐயத்தை மேலும் வலிமையாக்க விரும்பினால், முதற்சொல்லோடு 'உம்' சேர்க்கலாம். கேட்டாலும் தருவாயா? பார்த்தாலும் சொல்வாயா? எடுத்தாலும் கொடுத்துவிடுவாயா?இவை இரண்டு செயல்களைப் செய்வது பற்றி அமைந்த தொடர்கள். இதே முறையில் வழக்கத்தில் உள்ள தொடர்கள் சில உள்ளன.“வந்தாலும் வருவாண்.”“கொடுத்தாலும் கொடுப்பான்.”“செய்தாலும் செய்வாண்.”இங்கே மறைந்துள்ள பொருளைப் பாருங்கள். வந்தாலும் வருவாண், அவன் வராமலும் இருக்கக் கூடியவன்தான். கொடுத்தாலும் கொடுப்பான், அவன் கொடுக்காமலும் இருக்கக் கூடியவன்தான். செய்தாலும் செய்வாண், அவன் செய்யாமலே இருக்கக்கூடியவன்தான்.இவ்வாறு ஒரு சொற்றொடரின் உள்ளார்ந்த அமைப்பிற்குள், பழக்க வழக்கத்தினால் அமைந்த பொருள்கள் ஒளிந்திருக்கின்றன.- மகுடேசுவரன்