உள்ளூர் செய்திகள்

மயக்கும் மாய உலகம்!

ஓவியா வி.ஆர். பாக்ஸை கண்ணாடி மாதிரி போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தாள். உமா மிஸ்ஸும் பக்கத்தில் உட்கார்ந்து என்னவோ சொல்ல, ஓவியா முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி எனக்குப் புதுசாக இல்லை.இந்த வர்ச்சுவல் ரியாலிட்டி பெட்டியை என் மாமா பையன் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்தான். அதிலேயே மூழ்கி விளையாடியிருக்கிறேன். ஓவியாவுக்கு அதில் என்னவோ புதுமையாகத் தெரிகிறது போலிருக்கிறது!“நான் இதுல நிறைய கேம்ஸ் விளையாடியிருக்கேன் மிஸ்.” என்றேன் அருகில் போய். “ஓ! உனக்குத் தெரியுமா? பயன்படுத்தியிருக்கியா?” என்று கேட்டார் மிஸ்.“நிறைய தரம் மிஸ். அதுலேயே மூழ்கிப் போயிடுவேன். எவ்ளோ கேம்ஸ் இருக்கு தெரியுமா மிஸ். போகிமான் விளையாட்டுக்காகவே பார்த்திருக்கேன்.”“இதுல பாடம் படிச்சிருக்கியா?”“பாடமா?”“ஆமாம். இதுல படிச்சா, எல்லாம் நல்ல ஆழமா புரியும், தெரியுமா?”இதை ஒரு விளையாட்டுப் பொருளாகத்தான் நான் இத்தனை நாட்களும் நினைத்துக்கொண்டு இருந்தேன். இதில் எப்படி பாடங்களைப் படிக்க முடியும்?“நல்லா படிக்க முடியும். இதுக்குப் பேரே 'இம்மர்சிவ் லேர்னிங்.' அதாவது ஆழமாக உள்ளே பதியக்கூடிய கல்வி.”“அப்படியா?”“ஆமாம். நீ சீனப் பெருஞ்சுவர் எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா?”“போட்டோவுல பார்த்திருக்கேன் மிஸ். பிரமாதமாக இருக்கும் மிஸ்.”“நேரா எப்படி இருக்கும்? நிச்சயம் அதைவிடச் சிறப்பாக இருக்குமில்லையா? ஆனால், எல்லோராலையும் சீனா போகமுடியாது. வி.ஆர். பாக்ஸ் வழியாக அதை நேரடியா பார்க்கும் அனுபவம், தொடக்கூடிய அனுபவம், நடக்கக்கூடிய வாய்ப்பு எல்லாம் கிடைக்கும்.”“ஓ!”“இன்னிக்கு வி.ஆர்.இல இல்லாத வசதியே இல்லை. பல துறைகளில் இதன் தாக்கம் அதிகமாகிக்கிட்டே வருது…” என்று உமா மிஸ் விளக்க ஆரம்பித்தார்.குறிப்பாக மருத்துவத் துறையில், மெய்நிகர் முறையில் நோயாளிகளுக்கும் வைத்தியம் செய்து பார்க்கலாம். பற்களில் ஓட்டை போட்டு, ரூட் கெனால் சிகிச்சை செய்யலாம். அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நர்ஸுகள் எப்படி வேகமாகச் செயற்பட வேண்டும் என்று பயிற்சி செய்து பார்க்கலாம். இதில் உள்ள செளகரியம் என்ன தெரியுமா? இதையெல்லாம் மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து, பயிற்சி செய்துகொண்டே போகலாம் என்பதுதான். அதாவது இவையெல்லாம் நேரடியாக அல்ல. ஆனால், வர்ச்சுவலாக. மெய்நிகராக. எகிப்து பிரமிடுகள், அதேபோல் எண்ணற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை, பல விளையாட்டுகளாக உருவாக்கியுள்ளார்கள். வி.ஆர். கண்ணாடியைப் போட்டுக்கொண்டு, விளையாடத் தொடங்கினால், நாமும் அதில் ஒரு பாத்திரமாகிவிடுவோம். விளையாட்டின் வழியாக அந்தக் கால மிச்சங்களை நேரடியாகப் போய் பார்க்க முடியும். அதுவும் உயிரும் உடலும் கொண்ட முப்பரிமாண வடிவத்தில்.வரலாற்றில் நடந்த பல போர்களை அப்படியே மீண்டும் வர்ச்சுவலாக உருவாக்க முடியும். அந்த அறை முழுக்க ஒரு போர்க்களமாக மாறி, அங்குமிங்கும் நகர்ந்து, அந்தக் காலத்துக்கே, இடத்துக்கே போய்விட்ட உணர்வு கிடைக்கும்.வேதியியலில் நாம் குடுவைகளையோ, அமிலங்களையோ கூடத் தொடாமல், சோதனைகளைச் செய்து பார்க்க முடியும். ஒவ்வொரு பொருளும் வர்ச்சுவலாக இருக்க, அதை உரிய வகையில் பயன்படுத்துவதன் மூலம், என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ, அதைக் கற்றுக்கொள்ளலாம்.இன்னொரு முக்கியமான இடம், மொழிப் பயிற்சி. குறிப்பாகப் உச்சரிப்புப் பயிற்சி. ஒவ்வொரு நாட்டின் அங்கிலமும் வேறுவேறு மாதிரி இருக்கும். அந்தந்த உச்சரிப்பை எப்படிக் கற்றுக்கொள்வது? வி.ஆர். பெட்டி வழியாக, நீங்களே அதில் ஓர் அவதாரமாக மாறி, மற்றவர்களோடு கலந்துரையாடிக் கற்றுக்கொள்ளலாம். அதுவும் வேறு வேறு நாடுகளுக்குப் போய், அவர்களோடு அந்த ஊர் உச்சரிப்பைப் பேசியே கற்றுக்கொள்ள முடியும்.“இதுல இருக்கிற முக்கியமான சிறப்பே, கவனம் குவிவதுதான். வி.ஆர். கண்ணாடியைப் போட்டுக்கிட்டா வெளிஉலகமே தெரியாது. நீங்க இந்த விளையாட்டு அல்லது செயலியைப் பயன்படுத்தினால், அந்த மாய உலகத்துக்கே கூட்டிக்கிட்டுப் போயிடும். நேரம் போவதே தெரியாது. அதைவிட, கவனம் சிதறவே சிதறாது. கண்ணுக்கு கிட்டே ஒரு நிஜ உலகம், பல வண்ணங்களோட, பல்வேறுவித செயற்பாடுகளோட உலவினால், மூளை பராக்கு பார்க்குமா என்ன?”நானும் இதில் பல மணிநேரங்கள் விளையாடி இருக்கேன். அப்பாவும் அம்மாவும் நான் சும்மா நேரத்தை வீணாக்குகிறேன் என்று திட்டியதும் உண்டு. ஆனால், அதையே உபயோகமாக மாத்திக்கொள்ள முடியும் போல இருக்கே.“இன்னிக்கு உலகத்துல பல நாடுகளில் இதுபோன்ற வி.ஆர். கேம்ஸ், புரோக்ராம்ஸ் உருவாக்கிக்கிட்டே இருக்காங்க. கல்வித் துறையில மிகப்பெரிய புரட்சியை இது ஏற்படுத்தப் போகுதுங்கறதுதான் கணிப்பு.” என்றார் உமா மிஸ்.எல்லா பாடத்தையும் விளையாட்டா, ஜாலியா சொல்லிக் கொடுத்தா யார்தான் வேண்டாம்னு சொல்வாங்க. வீட்டில் எங்கோ எடுத்துவைத்த வி.ஆர். கண்ணாடியைத் தேடி எடுக்கணும். இதுல இவ்ளோ விஷயம் இருக்கும் போது, விட முடியுமா என்ன?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !