உள்ளூர் செய்திகள்

அந்நிய மரங்கள் - நாட்டு மரங்கள்: ஆராய்ச்சி தேவையா?

எது நம்முடையது, எது பிறருடையது என்பதை விவாதிப்பதில் நமக்கு ஆர்வம் அதிகம். இதில் வேதனை, மரங்களையும் இந்த அடையாளத்துக்குள் இழுத்ததுதான். நாட்டு மரம், வெளிநாட்டு மரம் என மரங்களை வகைப்படுத்துகிறோம். உலகமயமாக்கலின் காரணமாக, நாம் பயன்படுத்தும் பொருட்கள் உலகின் பல நாடுகளிலிருந்து வருபவைதான். ஆனால், மரங்கள் என்று வரும்போது மட்டும் ஏன் அந்நிய அடையாளம்? பன்மொழி, பல வகையான உணவுப் பண்டங்கள், கலாசார வேறுபாடு என்பதோடு, பல்லுயிர் தாவரங்களை ஏற்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மடகாஸ்கர் என, கண்டங்கள் தாண்டி மரங்கள் இந்தியாவுக்கு வந்தன. மரங்களின் மார்க்கம்! * வணிகர்கள் மூலம், கடல் மார்க்கமாக மரங்கள் வந்தன. அவர்களின் நாட்டிலுள்ள பிரபலமான பழங்கள், விதைகள், நறுமணப் பொருட்களை எடுத்து வந்தனர். * தென்னை மரங்கள், கடல் மார்க்கமாகத்தான் இந்தியக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தன. இந்தியத் துணைக் கண்டத்தின் தீவுகளில் உள்ள தென்னை மரங்கள், 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவை வந்தடைந்தவை. * புளியமரம், இந்தியாவுக்கு வந்து 1,000 ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்குள்ள தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப பெருமளவு மாறிவிட்டன. * இந்திய மன்னர்களைச் சந்திக்க பிற நாட்டினர் வந்தனர். மன்னரை மகிழ்விக்கவும், வணிகத்தை அதிகரிக்கவும் அன்பளிப்பாக மரங்களை எடுத்து வந்திருக்கிறார்கள். மொகலாய மன்னர்களுக்குத் தாவரங்கள் மீது மிகுந்த ஆர்வம். குறிப்பாக பாபர், திப்பு ஆகிய அரசர்கள் தோட்டப்பயிர்களை அதிகம் விரும்பி வரவழைத்தார்கள். நகரங்களில் மரங்களை நடவு செய்ததோடு, அதனுடைய எதிர்காலப் பயன்களையும் உணர்ந்திருந்தனர். மரங்களின் பரிசோதனை கூடமாகவே எப்போதுமே இருப்பது நீலகிரி மலைப்பகுதிதான். 18ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் தைல மரத்தை (யூகலிப்டஸ்) நீலகிரிக்கு அறிமுகம் செய்தார். இப்படித் தொடர்ந்து நாம் பல நாடுகளின் மரங்களை வரவேற்று வந்திருக்கிறோம். (இன்னும் பேசுவோம்)- ஹரிணி நாகேந்திரன்Cities and canopies என்ற நூலில் இருந்து...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !