வலி மிகுதல் - 33 - வேற்றுமைத் தொகையில் வலி மிகுதல்
ஒரு பெயர்ச்சொல்லோடு ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்ற வேற்றுமை உருபுகளில் ஒன்று ஒட்டி வருவது, வேற்றுமைத் தொடர். தண்ணீரைக் குடி என்பது இரண்டாம் வேற்றுமைத் தொடர். இங்கே தண்ணீர் என்ற சொல்லோடு ஐ என்ற வேற்றுமை உருபு ஒட்டி வந்திருக்கிறது. வேற்றுமை உருபு வெளிப்படாமல் மறைந்து வருவதுதான் வேற்றுமைத் தொகை. 'தண்ணீர் குடி' என்றாலும் 'தண்ணீரைக் குடி' என்றாலும் ஒரே பொருள்தான் கிடைக்கும். 'தண்ணீர் குடி' என்பதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து நிற்கிறது. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து நிற்பது, இரண்டாம் வேற்றுமைத் தொகை. இவ்வாறு இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைத் தொகைகள் இருக்கின்றன. அவற்றுக்கு வலி மிகுமா, மிகாதா என்று அறிந்துகொள்ள வேண்டும்.ஐ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு. ஐ மறைந்து வருவது, இரண்டாம் வேற்றுமைத் தொகை. தண்ணீர் குடி - இரண்டாம் வேற்றுமைத் தொகை - வலி மிகாது. தண்ணீரைக் குடி என்று விரிந்து பொருள் தரும்போது, வலி மிகும்.ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. ஆல் மறைந்து வருவது மூன்றாம் வேற்றுமைத் தொகை. கை தொழுதான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை - வலி மிகாது. கையால் தொழுதான் என்று விரிந்து பொருள்தரும். கு என்பது நான்காம் வேற்றுமை உருபு. கு மறைந்து வருவது நான்காம் வேற்றுமைத் தொகை. வள்ளித் திருமணம் - நான்காம் வேற்றுமைத் தொகை - வலிமிகும். வள்ளிக்குத் திருமணம் என்று விரிந்து பொருள்தரும். இன், இல் என்பவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள். அவை மறைந்து வருவது ஐந்தாம் வேற்றுமைத் தொகை.தாய்மொழி கூறு - ஐந்தாம் வேற்றுமைத் தொகை - வலி மிகாது. தாய்மொழியில் கூறு என்று விரிந்து பொருள்தரும். அது என்பது ஆறாம் வேற்றுமை உருபு. அது மறைந்து வருவது ஆறாம் வேற்றுமைத் தொகை.குருவிக் கூடு - ஆறாம் வேற்றுமைத் தொகை - அஃறிணைக்கு வலி மிகும். குருவியினது கூடு என்று விரிந்து பொருள்தரும். தலைவி கூற்று - ஆறாம் வேற்றுமைத் தொகை - உயர்திணைக்கு வலி மிகாது. தலைவியினது கூற்று என்று விரிந்து பொருள்தரும்.கண் என்பது ஏழாம் வேற்றுமை உருபு. கண் மறைந்து வருவது ஏழாம் வேற்றுமைத் தொகை. மலைக்கோவில் - ஏழாம் வேற்றுமைத் தொகை - வலி மிகும். மலைக்கண் கோவில் என்று விரிந்து பொருள்தரும்.- மகுடேசுவரன்