சுற்றுப்புறத்தை அழகாக்கும் விழாக்கள்
இலக்கியத்தில் பொங்கல் குறித்து 'தை நீராடல்' என்ற சொல்லாடல்தான் காணப்படுகிறது. பெண்கள் நீராடி நோன்பிருந்ததாகப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு சமூகத்தின் வளர்ச்சி, போக்கு, மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பண்டிகைகளின் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம். மக்களின் எண்ணப்போக்கிற்கு ஏற்ப விழாக்கள் மாறியும், உருவாகியும் வருகின்றன. அப்படித்தான் பொங்கல் விழாவும் படிப்படியாக மாறி தற்போதைய நிலையை அடைந்திருக்கிறது. வேட்டையாடுதலை விட்ட மனிதன், வேளாண்மையை கற்றுக்கொண்டான். வயலில் விளையும் அரிசி, பருப்பு, கிழங்குகள், காய்கறிகள், கரும்பு, பூசணிப்பூ, காட்டோரம் விளையும் பூளைப்பூ அனைத்தையும் சூரியனுக்கு வைத்து படையலிட்டு மகிழ்ந்தான். உழவுக்கு உழைத்த மாடுகளுக்கும் நன்றி சொல்லும் விதமாய் மாட்டுப்பொங்கல் வைக்கிறான். தான் இந்த பூமிக்கு வர காரணமாய் இருந்த தன் முன்னோர்களை நினைவில் நிறுத்தும் விதமாக அவர்களுக்கும் சேர்த்துப் படையலிடுகிறான். சுற்றுப்புறத்தை அழகாக்க, வெள்ளை அடித்தல், கோலமிடல், செம்மண் பூசுதல், தோரணம் கட்டுதல் என்று பண்டிகையைக் காரணமாக வைத்து வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்கிறான்.