குறியீடுகளைக் கண்டறிந்தவர்கள்
வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தேன். ஒரு மாணவன் எழுந்து “நாம் கணிதத்தில் பயன்படுத்தும் கூட்டல் (+), கழித்தல் (-) மற்றும் சமன் (=) குறியீடுகளை யார் அறிமுகப்படுத்தினார்கள்? இதை நாம் எப்பொழுதிலிருந்து பயன்படுத்துகிறோம்?” என்று கேட்டான். வித்தியாசமாகச் சிந்தித்த அந்த மாணவனைப் பாராட்டிவிட்டு, விடையளித்தேன்.“கி. பி. 1489ஆம் ஆண்டிலிருந்து கூட்டல் (+), கழித்தல் (-) குறியீடுகளையும், கி.பி. 1557ஆம் ஆண்டிலிருந்து சமன் (=) குறியீட்டையும் நாம் பயன்படுத்துகிறோம். கூட்டல் (+) குறியீட்டை வழங்கியவர் 'நிகோல் ஓரெஸ்மே' (Nicole Oresme) என்ற ஃபிரெஞ்சு கணித அறிஞர்.கழித்தல் (-) குறியீட்டை வழங்கியவர் 'ஜோஹனெஸ் விட்மேன்' (Johannes Widmann) என்ற ஜெர்மன் கணித அறிஞர். சமன் (=) குறியீட்டை வழங்கியவர் 'ராபர்ட் ரெகார்ட்' (Robert Recorde) என்ற இங்கிலாந்து கணித அறிஞர். இக்குறியீடுகளை இங்கிலாந்து நாட்டவரே முதன் முதலில் பயன்படுத்தினார்கள்” எனக் கூறினேன். கேள்வி கேட்ட மாணவனுக்கு மட்டுமல்ல, எல்லா மாணவர்களுக்கும் சந்தோஷம்! - இரா. செங்கோதை, கணித ஆசிரியை, பை கணித மன்றம்