உள்ளூர் செய்திகள்

முதலாம் நாவலர்

தமிழின் முதல் நவீனமான 'பிரதாப முதலியார் சரித்திரம்'. எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மாயூரமா? கேக்கவே புதுசா இருக்கே! என அதிசயிக்கவேண்டாம். இப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறையே முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மாயூரம் என்றும் மாயவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. மாயூரம் மாவட்ட முன்சீப்பாக ௧௩ ஆண்டுகள் பணிபுரிந்தவர் வேதநாயகம் பிள்ளை. இவர் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல. நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், பதிவாளராகவும் பணியாற்றினார். பின்னர் தரங்கம்பாடியில் முன்சீப் பணியில் சேர்ந்தார். மாயவரம் நகர்மன்றத் தலைவராகவும் இருந்தார். அப்போதுதான் தமிழின் முதல் புதினமான 'பிரதாப முதலியார் சரித்திரம்' நூலை எழுதினார். இதைக் கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டீர்கள். புத்தகம் முழுக்க சிரிப்புக்குப் பஞ்சமேயில்லை. இவர் பத்துக்கும் மேலான புத்தகங்களை எழுதியுள்ளார். வீணை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.இவரது நூல்கள் வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்குக் கருத்துகள் ஆகியவற்றை வலியுறுத்தின. தமிழ் உரைநடையை வளம்பெறச் செய்த முன்னோடிகளில் இவரும் ஒருவர். பெண் கல்வி குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் இவரது உரைநடையின் சிறப்பை நமக்குக் கூறும். மாயூரத்தில் இவர் தொடங்கிய பெண்கள் பள்ளியே, தமிழகத்தில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட முதலாவது பள்ளி!தமிழக கிறிஸ்தவர்கள் தமிழிலேயே வழிபட வேண்டும் என இவர் விரும்பினார். அதனால் திருவருள் மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா மாலை, பெரிய நாயகி அம்மைப் பதிகம் போன்ற கிறிஸ்தவ சமய இலக்கியங்களையும் படைத்தார்.அவர் காலத்தில் தமிழகத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, தன்னால் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்து மக்களின் மதிப்பைப் பெற்றார். தமிழ் இலக்கிய வரலாற்றில் திருப்பு முனை ஏற்படுத்தியவர், கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, கவிஞர் எனப் பலவாறும் போற்றப்படும் வேதநாயகம் பிள்ளை ௧௮௮௯ஆம் ஆண்டு தனது 63ஆம் வயதில் மறைந்தார்.தமிழுக்கு முதல் நாவலைத் தந்ததால், நாம் இவரை முதலாம் நாவலர் என அழைக்கலாமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !