உள்ளூர் செய்திகள்

ஐந்து அங்கங்கள்

கொஞ்சம் கதை பேசலாமா?பழைய கதைதான். ஆனாலும் பரவாயில்லை. கவனமாகக் கேளுங்கள். அதன்பிறகு, இதைப்பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன். ஓர் ஊரில் ஒரு பையன் இருந்தானாம். அவன் ரொம்பச் சுறுசுறுப்பாம். எந்நேரமும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருப்பானாம்.அந்தப் பையனிடம், ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எப்போதும் ஏதாவது பொய்சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவான். அவர்கள் பதறும்போது, கேலிசெய்து சிரிப்பான். உதாரணமாக, திடீரென்று 'புலி, புலி, புலி' என்று கத்துவான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பயத்தோடு புலியைத் தாக்கத் தயாராவார்கள். இவன் விழுந்து விழுந்து சிரிப்பான். 'சும்மா சொன்னேன், ஏமாந்துட்டீங்களா?' என்பான்.ஒருநாள், அவன் ஊருக்கு வெளியிலிருந்த மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, அங்கே நிஜமாகவே ஒரு புலி வந்துவிட்டது. பயந்துபோன அவன், 'புலி, புலி... என்னைக் காப்பாத்துங்க' என்று கத்தினான்.அந்தச் சத்தம் ஊர்மக்கள் காதில் விழுந்தது. ஆனால், அவர்கள் அவனை நம்பவில்லை. 'பய எப்பவும்போல நம்மை ஏமாத்தறான்' என்று நினைத்தார்கள். தங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் அவனுக்கு உதவிக்கு வரவில்லை.எப்படியோ புலியிடமிருந்து ஓடித் தப்பினான் அந்தப் பையன். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வந்தது. 'இனிமே யார்கிட்டயும் பொய்சொல்லி ஏமாத்த மாட்டேன்' என்று நினைத்துக் கொண்டான்.கதை முடிந்தது. இதில் என்ன ரகசியம்?இந்தக் கதை ஐந்து பத்திகளாக உள்ளது. அவற்றைக் கவனித்துப் பாருங்கள். அவை கதையின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.விதையொன்று முளையாகி, செடியாகி, மரமாகி, காய்த்துப் பழுத்து நிற்பதுபோல, ஒவ்வொரு கதையும் தொடங்கி, வளர்ந்து, விரிகிறது. வாசிப்போரை ஈர்க்கிறது.நாடக இலக்கணம் இதனை ஐந்து 'சந்தி'களாக, அதாவது, ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கிறது: முகம், பயிர்முகம், கருப்பம், விளைவு, துய்த்தல்.முகம்: விதையானது முளையாக வெளிவருவதுபோல, கதையின் தொடக்கத்தைச் சொல்கிறது. கதை மாந்தரை அறிமுகப்படுத்துகிறது.பயிர்முகம்: முளைத்த நாற்றில், இலை தோன்றுவதுபோல, கதையை வளர்த்துச்செல்கிறது.கருப்பம்: வளர்ந்த பயிரில் தானியமணிகள் தோன்றுவதுபோல, கதையின் முக்கியக்கருத்து வெளிப்படுகிறது.விளைவு: தானியங்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிட்டன. கதையும் முடிவை நோக்கி நகர்கிறது.துய்த்தல்: தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு உண்ணப்படுகின்றன. கதையின் பலன் கேட்போருக்குக் கிடைக்கிறது.இப்போது, மேலே உள்ள கதையை அலசிப்பாருங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த இன்னொரு கதையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இந்த ஐந்து பகுதிகளும் வெளிப்படுகின்றனவா?இந்தச் 'சந்தி'களை 'அங்கம்' என்றும் சொல்வதுண்டு. இவற்றில் ஏதேனும் ஓர் அங்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அமைந்த நாடகங்களை 'ஓரங்கநாடகம்' என்பார்கள்.ஓரங்க நாடகங்களும் சுவையானவைதான். ஆனால், இந்த ஐந்து அங்கங்களும் சரியாக அமையும்போது, அது மிகச்சிறப்பாக அமையும். சரி, 'டிவி' நாடகங்கள் இந்த இலக்கணத்துக்குள்ள அடங்குமா?!- என். சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !