இயற்கையின் ஐந்து புதையல்கள்
இந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம், உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரம் கஞ்சன் ஜங்கா. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கும், நேபாளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்களில் இதுவும் ஒன்று. அடர்ந்த காடுகளையும், குறைந்த வெப்பமண்டலம் முதல் ஆர்டிக் வரையிலான சூழல்களில் வாழும் உயிரினங்கள், தாவரங்களையும் உள்ளடக்கியது. வெப்ப மண்டலக்காடு, ஊசியிலைக் காடு, அல்பைன் காடு என, வெவ்வேறு வகையாகப் பரவியுள்ள வனப்பகுதியில், பல இயற்கை மூலிகைகள் நிறைந்துள்ளன. பனிச் சிறுத்தை, இமயமலை சிகப்பு பான்டா, கஸ்தூரி மான், திபெத் ஆடு, இமயமலை வரையாடு, குரங்குகள் போன்ற விலங்கினங்களும், கழுகு, ஆந்தை, கொம்புக் கழுகு, பனிக்காகம் போன்ற பறவைகளும் இங்கு வாழ்கின்றன. பனி ஆறுகள், ஏரிகள் நிறைந்த இந்தப் பகுதியில், சுமார் 5,925 மீட்டர் உயரத்திற்கு மேலே அமைந்துள்ளது. இந்தச் சூழல் மண்டலத்தின் பரப்பளவு 2,619 சதுர கிலோ மீட்டர். நிலச்சரிவினால் ஏற்படும் மண் இழப்பு மூலம் வனவிலங்குகள் புலம்பெயர்தல், இந்த உயிர்க்கோளப் பகுதிக்கு உள்ள மிக முக்கிய அச்சுறுத்தலாகும்.'கஞ்சன் ஜங்கா' எனும் பெயருக்கு 'பனிமலையின் ஐந்து புதையல்கள்' என்பது பொருள். இங்குள்ள ஐந்து சிகரங்களை இது குறிக்கிறது.கஞ்சன் ஜங்கா தேசியப் பூங்கா வடக்கு சிக்கிம் மாநிலத்தில், 850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 1977ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் எல்லைகள்: வடக்கில் 'டென்ட் பீக்' சிகரம், கிழக்கில் 'மவுன்ட் லெமோ, ஆங்டன்' பீடபூமி மலை, தெற்கில் 'மவுன்ட் நார்சிங்', 'மவுன்ட் பாண்டிங்', மேற்கில் 'கஞ்சன் ஜங்கா' மலை. அருகி வரும் பல உயிரினங்கள், தாவரங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.உயரம் - 8,586 மீட்டர்சிகரம் - 3,922 மீட்டர்- ப.கோபாலகிருஷ்ணன்