அறிவைப் பெற ஐந்து வழிகள்
சரவணன் விளையாடக் கிளம்பினான். மைதானத்தை நோக்கி ஓடியபோது, வழியில் அவன் ஒரு வித்தியாசமான காட்சியைக் கண்டான். முதியவர் ஒருவர் சாலையோரமாக இருந்த மண்ணில் பள்ளம் தோண்டி எதையோ நட்டுக்கொண்டிருந்தார்.சரவணன் அவரை ஆவலோடு நெருங்கிப் பார்த்தான். அவர், தன் கையிலிருந்த சில விதைகளை மண்ணில் ஊன்றிக்கொண்டிருப்பது தெரிந்தது.''ஐயா, என்ன செய்றீங்க?'' என்று விசாரித்தான் சரவணன்.''விதை போடறேன்'' என்று சிரித்தார் அந்தப் பெரியவர். ''நாளைக்கு இந்த விதை பெரிய மரமாகி நமக்கெல்லாம் நிழல் தரும்!''''அப்படியா? இந்தச் சின்ன விதையா அவ்ளோ பெரிய மரமாகும்?''''ஆமாம்'' என்று பெருமையோடு சொன்னார் பெரியவர். ''அதுதான் இயற்கையோட மந்திரம். இந்தச் சின்ன விதையை நட்டு, ஒழுங்காத் தண்ணி ஊத்தினா, அதுல ஒரு செடி வரும். அது, சூரிய ஒளியிலேர்ந்து தன்னோட உணவைத் தானே தயாரிச்சுக்கிட்டு பெரிய மரமாகும்.''சரவணன் அந்தப் பெரியவரை நினைத்தபடியே விளையாடி முடித்தான். வீடு திரும்பியதும், தன் தாயிடம் இதைப்பற்றிச் சொன்னான். அவர் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். அதன் தலைப்பு, ''மரங்கள் எப்படி வளர்கின்றன?''அந்தப் புத்தகத்தைச் சரவணன் அன்றைக்கே படித்துவிட்டான். மரங்களைப்பற்றி நிறையத் தெரிந்துகொண்டான். தன் வீட்டில் ஒரு தோட்டம் வைத்து, பல செடிகளை வளர்க்கத் தொடங்கினான்.இந்தக் கதையில் வரும் சரவணன், தோட்டவேலையை எப்படிக் கற்றுக்கொண்டான்?முதலில், யாரோ செய்வதைப் பார்த்தான்.அவர் சொன்னதைக் கேட்டான்.அவரிடம் மேலும் விசாரித்துப் புரிந்துகொண்டான்.ஒரு புத்தகத்தைப் படித்துக் கற்றான்.அவனே தோட்டத்தில் இறங்கி வேலைசெய்து கற்றுக்கொண்டான்.அறிவைப் பெறுவதற்கான இந்த ஐந்து வழிகளையும் காட்சி, கேள்வி, உசாவல், கல்வி, பாடு என்று அழைப்பார்கள்:காட்சி: பார்த்துக் கற்றுக்கொள்வது, எடுத்துக்காட்டாக, படம் வரைதல்கேள்வி: கேட்டுக் கற்றுக்கொள்வது, எடுத்துக்காட்டாக, பாடுதல்உசாவல்: பலரிடம் விசாரித்துக் கற்றுக்கொள்வது, எடுத்துக்காட்டாக, ஒரு மொழியைக் கற்றல்கல்வி: நூல்களை வாசித்துக் கற்றுக்கொள்வது, எடுத்துக்காட்டாக, வரலாறு, தத்துவம் போன்றவைபாடு: ஒரு வேலையைச் செய்து (பாடுபட்டு) அதன்மூலம் கற்றுக்கொள்வது. எடுத்துக்காட்டாக, மிதிவண்டி ஓட்டக் கற்பது.சரவணனைப்போல் ஒரே வேலையை ஐந்து வழிகளிலும் கற்கலாம். ஓரிரு வழிகளிலும் கற்கலாம். அது அவரவருடைய சூழ்நிலை, திறமை, வேலையின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.உங்களுடைய திறமைகள் என்னென்ன? அவற்றை நீங்கள் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்? யோசியுங்கள்!- என். சொக்கன்