கொடி வீரன்!
திருப்பூர் குமரன்4.10.1904 - 11.1.1932செ.மேலப்பாளையம், சென்னிமலை, ஈரோடு.காவலர்களின் பூட்ஸ் கால்கள் ஒவ்வொரு போராட்ட வீரரின் உடலிலும் வரிசையாகப் பதிய ஆரம்பித்தன. வலி தாங்க முடியாமல் வீரர்கள் சுருண்டு விழ, ஒருவரது கையிலிருந்த நம் தேசியக் கொடி மட்டும், பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது. அந்தக் கொடியைத் தன் நெஞ்சோடு தாங்கிப் பிடித்திருந்தவர் 'கொடிகாத்த' குமரன்.ஏழ்மையான நெசவாளர் குடும்பம் என்பதால், போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடினார். அதனால் 5ம் வகுப்பு வரை மட்டுமே குமரனால் படிக்க முடிந்தது. 18 வயதானபோது, தந்தைக்கு உதவியாக நெய்த துணிகளைச் சுமந்து திருப்பூரில் கொடுத்து விட்டு திரும்புவார் குமரன். சுயமாகத் தறி நெய்தும் வருமானம் போதாமல் போகவே, திருப்பூருக்கு வந்து கணக்கெழுதும் வேலையில் சேர்ந்து, ராமாயி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தேசபக்திப் பாடல்களைப் பாடி, நாடகங்களை நடத்தும் திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்கு இருந்தது. இதனால், பிரிட்டிஷ் போலீசாரின் பார்வை அவர் மீது அடிக்கடி விழுந்தது.இளம் வயதிலேயே நாட்டுப்பற்றும் விடுதலை வேட்கையும் இருந்ததால், திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்துகொண்டு, பல போராட்டங்களுக்குத் தலைமையேற்றார். கதர் இயக்கத்தில் சேர்ந்து கதர்க் குல்லா, கதர் உடை என்று அணியத் தொடங்கினார். 1932, ஜனவரியில் காந்தியடிகளின் 'ஒத்துழையாமை' இயக்கத்துக்கு ஆதரவாகத் தமிழகத்தில் போராட்டம் நடந்தது. இது குமரனின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.அந்தப் போராட்டத்தில் போலீஸாரின் தாக்குதல்களுக்குப் பிறகும் கொடியிலிருந்து குமரனின் விரல்களைக் பிரிக்க முடியவில்லை. மண்டை உடைந்தும் 'வந்தேமாதரம்' எனத் தளராத குரலோடு ரத்தத்துடன் கொடியைத் தாங்கிய குமரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டியது. இவ்வாறு தன் இளமையை நாட்டிற்காக அர்ப்பணித்த குமரன், நம் நெஞ்சில் என்றும் நிறைந்திருப்பார்.