உள்ளூர் செய்திகள்

மலர்களே... மலர்களே...

பச்சைப்பசேல் என செழிப்புடன் வளரும் தாவரமே கண்கொள்ளா அழகு என்றால், அதில் பூக்கும் மலர்கள் அதைவிட அழகு. மலர்கள் செறிந்த தாவரம், நமது மனதைக் கொள்ளைகொண்டு போகும் அல்லவா? மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. மலருக்கு அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என்ற ஏழு வகை வளர்பருவங்கள் உண்டு என, இலக்கியம் கூறுகிறது. வாழ்த்துவதற்காக அளிக்கும் மலர்க்கொத்து, பெண்கள் தலையில் வைக்கும் மலர், கடவுள் வழிபாடு என, பல வகையில் நாம் பூக்களை நமது கலாசாரத்தில் பயன்படுத்துகிறோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, தொல் மனித இனமான நியண்டர்தால் மனிதர்கள்கூட, தமக்குப் பிரியமானவர்கள் இறந்தபோது, அவர்களது உடலோடு மலர்க்கொத்தை வைத்துத்தான் புதைத்துள்ளனர். மலர் என்பது என்ன? தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புதான் மலர்கள். தாவரவியல் பார்வையில் கூறுவது என்றால், பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். வாழ்க்கைக்கு அழகு சேர்க்கும் பொருள் மட்டுமல்ல மலர்கள். மலரும் தாவரங்கள் தாம், மனிதனுக்குத் தேவையான உணவைத் தருகின்றன. காய், கனி முதல் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், அவரை, துவரை போன்ற பருப்பு விதைகள், எள், நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகள் எல்லாம், மலர் மற்றும் மலரிலிருந்து உருவாகும் பாகங்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுமார் 2,50,000 தாவரங்கள் சிறிதும் பெரிதுமாய் வண்ணமான நிறத்தில், பல்வேறு நறுமணங்களுடன் பல வகையான வடிவில் பூக்கின்றன. இதுவரையில் கிடைத்துள்ள மிகத் தொன்மையான பூவின் தொல்லியல் தடயம் சுமார் பன்னிரண்டு கோடி ஆண்டுகள் பழமையானது. கண்களுக்கே புலப்படாத வகையில், நுண் அளவில் இருக்கும் புல்லின் பூ முதல், மூன்று அடி அளவு பெரிதாக இருக்கும் ஒருவகை ஏரம் காட்டு மலர் வரை; தினமும் பூத்துக் குலுங்கும் செம்பருத்தி முதல், ஆண்டுக்கு ஒருமுறை ஒரே இரவில் எல்லா மலர்களும் சேர்ந்திசை போல ஒருசேர மலரும் 'பென்னியோசெரஸ் கரேகி' (Peniocereus Greggii) எனும் கள்ளிச் செடி வரை; சுமார் பதினைந்து லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன, அரியவகை ரோஜா மலர் முதல் சிறு குழந்தையை கொல்லும் அளவுக்கு விஷம் நிறைந்த ஒரு வகை அரளி மலர் வரை என, வகைவகையாக மலர்களின் உலகம் விரிந்து இருக்கிறது. மனதை மயக்கும், அறிவியலாளர்களை வியக்க வைக்கும் இந்த மலர்களின் உலகத்தின் வியப்பான செய்திகளை, வாராவாரம் இந்தப் பகுதியில் நாம் காண்போம். (தொடரும்)த.வி. வெங்கடேஸ்வரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !