மலர்களே மலர்களே (12) - ஒரே ஓர் இரவு இளவரசி
'செண்டு மல்லி' தினம் தினம் பூக்கும் என்பது தெரியும். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை ஓர் இரவு மட்டும் பூத்து, விடிவதற்குள் வாடி வதங்கி மறைந்து போகும் பூ, 'பிரம்ம கமலம் பூ'.அல்பாயுசுக்கு ஆகக்குறைந்த காலம் மட்டுமே வாழும் இந்தப் பூவைப் பறித்து விற்பனைக்கு எடுத்துச் செல்லமுடியாது என்பதால், வேடிக்கையாக 'விலை மதிப்பில்லா பூ' என்றுகூட கூறுவார்கள். 'நிஷாகந்தி' (Nishagandhi), 'ஓர்க்கிட் கேக்டஸ்' (Orchid Cactus), 'ஜங்கிள் கேக்டஸ்' (Jungle Cactus), 'நைட் புளூமிங் செரெஸ்' (Night Blooming Cereus), 'டச்மேன்'ஸ் பைப்' (Dutchman's Pipe) என்றெல்லாமும் இந்தக் கள்ளி வகைச் செடியை அழைப்பார்கள்.'எபிபைலும் ஆக்சிபெடாலம்' (Epiphyllum Oxypetalum) என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்தத் தாவரம் ஓர்க்கிட் (Orchid) எனப்படும் ஒரு வகை கள்ளிச் செடி. ஒரு புதரில் நாற்பது முதல் நூறு பூக்கள் வரை பூக்கும். விதையிலிருந்து செடி முளைப்பது வியப்பு ஒன்றும் இல்லை. அதுபோல, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து புதிதாக முளைக்கும் தாவர வகைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த அபூர்வ தாவரத்தின் தண்டுப் பகுதி மட்டுமல்ல, இலையை வெட்டி வைத்தாலே புதிதாக செடி முளைத்துவிடும். இந்தத் தாவரத்தின் இலை விளிம்புப் பகுதியில் இருந்து பூ பூக்கும்.பொதுவாக, இளவேனில் பருவ காலத்தில் பூக்கும் இந்தப் பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும். கண்களை கூசச்செய்யும் வெண்மை நிறத்தில் இருக்கும். பார்வைக்கு அப்படி ஒன்றும் ஆச்சரியத்தைத் தராது என்றாலும் பூ பூத்ததும் அந்தப் பிரதேசம் முழுமையும் நறுமணம் பரவி ஆளையே சொக்கவைக்கும். நட்டுவைத்த இலையிலிருந்து வேர் வெளி வரத் தொடங்கும். பிறகு இலையின் பக்கவாட்டில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அவற்றின் கணுக்களில் புதிய மொட்டுகள் உருவாகி மலர்களாய் மலரும். மலர், பொழுது புலர்வதற்குள் வாடி வதங்கி மடிந்துவிடும் என்பதால், மலர்ந்த இரவோடு இரவாக சூல் கொண்டு விதைக் கருவை உருவாக்க வேண்டும்.இரவில் மலர்ந்ததும் வீசும் வாசம் அங்கும் இங்கும் பறந்துகொண்டிருக்கும் அந்திப்பூச்சிகளை (Moths -- மோத்ஸ்) கவர்ந்து தன் பக்கம் இழுக்கும். கருமையான இரவிலும் பூச்சிகள் இனம் காணும்படியாக வெள்ளைவெளேரென 'பளிச்' என்று தட்டு அளவில் பெரிதாகப் பூக்கும். இந்த மலர்களில் இருந்து 'பென்சைல் சேலிசிலேட்' (Benzyl Salicylate) என்ற நறுமண வேதிப் பொருள் வெளிப்படும். அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டால்தான், இந்தத் தாவரப் பூ சூல் கொள்ள முடியும். மேலும் தன் செடியின் தண்டு அல்லது இலையிலிருந்து உருவான வேறு தாவரத்தின் பூ கூட அயல் மகரந்தச் சேர்க்கையைச் செய்ய முடியாது. வேறு விதையிலிருந்து உருவான தாவரத்தின் மகரந்தம் வந்து சேர்ந்தால்தான் இந்தப் பூ சூல் கொள்ள முடியும். எனவேதான், ஒரே சமயத்தில் பூத்து வாசம் வீசி அரக்கப்பரக்க பூச்சிகளைத் தனது தேனை அருந்த அழைத்து, அந்தப் பூச்சிகளின் துணையோடு அயல் மகரந்தச் சேர்க்கை செய்கிறது இந்தத் தாவரம்.