உள்ளூர் செய்திகள்

மினுக்கும் பூச்சி

மழைக்காலங்களில் இரவு நேரத்தில் வீட்டுத் தோட்டத்தின் செடிகளின் மேல் மினுக்கியபடி அமர்ந்திருக்கும் மின்மினிப் பூச்சிகளை (fireflies ) பார்த்திருக்கிறீர்கள்தானே! அந்தப் பூச்சிகளுக்கு மட்டும் வெளிச்சம் எப்படிக் கிடைக்கிறது? அதை அறியும் முன் அதன் வாழ்க்கை முறையைப் பற்றித் தெரிந்துகொள்வோம்...ஏரி, ஆறு, குளங்கள், நீரோடைகள் மற்றும் ஈரமான சூழல்நிலைகளில் மின்மினிகள் வசிக்கின்றன.பூச்சி என்று பெயரில் இருந்தாலும் உண்மையில் இது பூச்சி அல்ல, வண்டு (Beetle) வகையை சேர்ந்தது. உலகில் ஏறத்தாழ 2000 வகையான மின்மினிகள் உள்ளன. எப்படி நம் கை ரேகைகள் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறதோ, தனித்துவமாக இருக்கிறதோ அதே போல் இந்தப் பூச்சிகள் ஒவ்வொன்றும் தனித்துவமான ஒளி கொடுக்கும். ஒளியின் வாயிலாக ஒன்றோடு ஒன்று தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.இனப்பெருக்க நேரத்தில் ஆண் பூச்சிகள் மட்டும் பறந்து மினுக்கும். பெண் பூச்சிகள் கீழே புல், செடி, கொடிகளின் மீது அமர்ந்திருக்கும். பெண் பூச்சிகளில் சிலவகை பறக்காது.அன்டார்ட்டிகா (Antarctica) கண்டம் தவிர பிற கண்டங்கள் அனைத்திலும் இந்தப் பூச்சிகள் வசிக்கின்றன. வளர்ந்த பூச்சி மட்டும் ஒளிராது; சில வகையில் முட்டைக்குள்ளும் ஒளிரும்.லார்வா பருவத்தில், மரத்துப்போகும் தன்மை உள்ள ஒரு வித திரவத்தை ஊசி போல் செலுத்தி புழுக்களையும் சிலவகை நத்தைகளையும் உணவாக உட்கொள்ளும். வளர்ந்த பூச்சிகள் தேன், மகரந்தத் துகள்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன.இதன் ரத்தத்தில் ஒரு வித கசப்பு கலந்த திரவம் இருக்கிறது. இதனால் பெரும்பாலான விலங்குகள் இதை சாப்பிடுவதில்லை. ஆரஞ்சு, பச்சை , மஞ்சள் வண்ணங்களில் ஒளிர்கின்றன.ஆக்ஸிஜன் பூச்சியின் உள்ளே சென்றதும் அதன் உடம்பில் இருக்கும் சிறப்புச் செல்களால் வேதிமாற்றம் அடைகிறது. அந்த வேதிமாற்றம் லூசிபெரின் (Luciferin) என்று அழைக்கப்படுகிறது. அந்த லூசிபெரின்தான் மின்மினிகளுக்கு வெளிச்சம் தருகிறது. அந்த ஒளி அடி வயிற்றிலிருந்து வருகிறது. இதன் ஆயுட்காலம் சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே.'எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல; வாழ்வில் எப்படி ஒளிர்கிறோம் என்பதே முக்கியம்' என்கிற செய்தியைச் சொல்கிறதா மின்மினி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !