கலை பேசும் ஹளபேடு
கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பேளூர், ஹளபேடு. கி.பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை, கர்நாடகத்தை ஆண்டவர்கள் ஹொய்சாளர்கள். ஹொய்சாள என்றால் சிங்கத்தை வென்றவர்கள் என்று பொருள். ஹொய்சாள அரசின் தலைநகர்தான் பேளூர். பண்டைய கர்நாடகத்தின் பொற்காலமாக ஹொய்சாளர்களின் ஆட்சியை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கட்டடக்கலை, சிற்பக்கலை மட்டுமல்லாது ஆட்சிமுறை, விவசாயம் என எல்லாத் துறைகளிலும், சிறப்புமிக்கதாக ஹொய்சாளர்களின் காலம் திகழ்ந்துள்ளதற்கு சாட்சியாய் பேளூர் நிற்கிறது. ஹொய்சாள கட்டடக்கலையின் சாதனையாக ஆய்வாளர்கள் கருதுவது, பேளூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சென்னகேசவர் ஆலயம். தமிழக கோவில்களைப் போன்று, உயரமான கோபுரங்கள் இல்லை. அளவில் சிறியதாய் இருந்தாலும், நுண்ணிய கலை வேலைப்பாடுடன் கூடிய கோபுரங்களும், விதானங்களும் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத கலைப் பொக்கிஷங்களாக விளங்குகின்றன. பார்க்கப்பார்க்க பார்த்து முடியாத அளவுக்குச் சிற்பங்களால் நிறைந்து கிடக்கும் கோவில் இது. இக்கோவிலின் ஒவ்வொரு சிற்பமும் மிகச் சிறப்பானவைதான். 48 தூண்கள் கொண்ட மண்டபத்தில், ஒவ்வொரு தூணும் வெவ்வேறு கலைவேலைப்பாடுகளைக் கொண்டவை. சொல்லப்போனால், அவற்றை வர்ணனையில் அடக்க முடியாது.சென்ன கேசவர் ஆலயத்திலுள்ள புவியீர்ப்புத் தூணில், சிற்பங்கள் ஏதுமில்லை. ஆனாலும், அது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.42 மீட்டர் உயரமுள்ள அந்தத் தூண், எவ்விதப் பிணைப்புகளுமில்லாமல், தனித்து நிற்கிறது. நட்சத்திர வடிவிலான மேடையில் இத்தூண் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தூணின் எடையில்தான் அது நின்று கொண்டிருக்கிறது. ஹொய்சாளக் கோவில்கள் முழுவதுமே நட்சத்திர வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.பேளூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஹளபேடு ஹொய்சாளேஸ்வரர் ஆலயம். முழுக்க சிற்பங்களால் ஆன கோவில் இது. சுவர் தொடங்கி தூண்கள், உள்விதானம், மேற்கூரை என, எங்கு காணினும் அழகிய சிற்பங்களால் ஆனது. விரலளவு தொடங்கி 15 அடி உயரம் வரை சிற்பங்கள் காண்போரை வியப்பிலாழ்த்தி, கோவில் கட்டப்பட்ட பண்டைய காலத்திற்கே நம்மை அழைத்துச்செல்லும். கோவில் வளாகத்தினுள்ளேயே, தொல்லியல்துறையின் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. இதுவும் காணவேண்டிய ஒன்று. ஹொய்சாளப் பயணத்தை திட்டமிடுகையில், பேளூர் நகரை மையமாகக் கொண்டு திட்டமிடலாம். பிற முக்கிய இடங்கள், ஹளபேட் ஹொய்சாளேஸ்வரர் ஆலயம், கேதாரீஸ்வரர் ஆலயம், பெலவாடி வீரநாராயணர் ஆலயம், ஜாவகல், பசலூரு அரிசிகரே போன்றவை. இவ்விடங்கள் அனைத்தும், பேளூர் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருப்பதால், பேளூரில் தங்கி, பிற இடங்களுக்கு செல்லலாம். பேளூருக்கு மிக அருகிலிருக்கும் மலை வாசஸ்தலம், சிக்மஹளூர். இயற்கை விரும்பிகள் சிக்மஹளூரையும் சேர்த்தே திட்டமிடலாம். பேளூரில் அளவான கட்டணத்தில் தரமான தங்கும் விடுதிகள் உள்ளன. மைசூர், பெங்களூர், மங்களூர் நகரங்களிலிருந்து தரமான சாலைகள் பேளூரை இணைக்கின்றன. ரயில் பயணமெனில், பேளூருக்கு அருகிலிருக்கும் ஹசன் ரயில்நிலையம் உதவும்.அழகிய கட்டுமானம்ஹளபேடுக்கு அருகிலுள்ள சிற்றூர் பெலவாடி. இங்கு ஹொய்சாளக் கட்டடக்கலையின் குறிப்பிடத்தக்க சாதனையான வீரநாராயணர் ஆலயம் அமைந்துள்ளது. பேளூர், ஹளபேடு ஆலயங்களை ஒப்பிட்டால், அளவில் சிறியது. ஆனால், இதன் கட்டமைப்பு மிக நேர்த்தியானது. இங்குள்ள கிருஷ்ணர் சிலை இந்தியாவிலேயே அழகிய சிலையாக தொல்லியல்துறையால் குறிப்பிடப்படுகிறது. பண்டைய திராவிட கட்டடக்கலையின் மேன்மைக்கு, ஹொய்சாளர்களின் கட்டடக்கலை மிகமுக்கியமான காரணியாக இருக்கிறது. இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாத கட்டுமான உத்திகள் இக்கோவில்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.கோவில்களின் கட்டுமானத்திற்கு கருங்கற்களோடு, சாலிகிராம் (soap stone) எனும் அரியவகைக் கல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கரும்பளிங்கு போல் காட்சியளிக்கக் கூடிய இவ்வகைக் கற்களை நீரில் தொடர்ந்து ஊற வைத்தால், அவை நெகிழ்வுத்தன்மை பெறுகின்றன. அவ்வாறு ஊறவைக்கப்பட்டு, ஒரு மரத்தைச் செதுக்குவது போல, உளியால் மிக எளிதாக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.- அரசு பழனிச்சாமி