இதயம் கவரும் முதல்வர்!
அண்மையில் பல தமிழ் தினசரிகளில் வித்தியாசமான ஒரு முழுப்பக்க விளம்பரம் வந்தது. நம் பட்டம் இணைப்பின் முதல் இதழின் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்த எவர்வின் பள்ளிக் கூடத்தின் விளம்பரம் அது. “இந்தியாவில் எளிமை, நேர்மை, தியாகம் இவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முதலமைச்சர் ! சொந்த வீடு இல்லை. கார் இல்லை. வாடகை வீட்டில் வாழ்க்கை. வங்கி இருப்பு ரூ.10,800 மட்டும். மாதம் ரூ.5,000 சம்பளம். 19 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பவர்!” என்று அந்த விளம்பரம் வர்ணித்தது, தமிழ்நாட்டிலிருந்து 2,000 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் திரிபுரா மாநில முதலமைச்சரை!இங்கே இப்படி விளம்பரம் செய்யும் அளவுக்கு அவருடைய எளிமையும், நேர்மையும் நம்மவர்களைக் கவர்ந்திருக்கின்றன. சென்னை மேடவாக்கத்தில் இருக்கும் காயிதே மில்லத் கலைக் கல்லூரியை நடத்தும் காயிதே மில்லத் அறக்கட்டளை மாணிக் சர்க்காருக்கு 'பொதுவாழ்க்கையில் நேர்மை'க்கான விருதை அறிவித்தது. அதைப் பெறுவதற்கு சென்னைக்கு வந்தபோது, பள்ளி நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். இரு நிகழ்ச்சிகளுக்கு இடையே அவரை சந்தித்து உரையாடினோம்.பொது வாழ்க்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உங்களுக்கு யார் முன்மாதிரி?“அப்படி தனி நபர்கள் யாரும் இல்லை. என் குடும்பப் பின்னணியும், கட்சிக் கொள்கைகளும்தான். என் அப்பா ஒரு தையற்காரர். அம்மா, மாநில அரசு ஊழியராக வேலை பார்த்தார். எங்கள் வீட்டில் எளிமையான வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தோம். அது அப்படியே தொடர்கிறது.”எப்படி அரசியலுக்கு வந்தீர்கள்?“பள்ளிக்கூடம் படிக்கும்போது விலைவாசி பிரச்னை சமூகத்தில் பெரிதாக இருந்தது. நான் பள்ளிக்குப் போய் வரும்போதெல்லாம் தெருவில் நிறைய போராட்டங்களைப் பார்ப்பேன். மக்கள் திரண்டு போராடினால், அதிகாரிகள் வந்து என்ன பிரச்னை என்று கேட்கிறார்கள் என்பதைக் கண்டேன். அதுதான் எனக்கு உத்வேகமாக இருந்தது. பின்னர் கல்லூரியில் மாணவர் இயக்கத்தில் இருந்தேன். அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன்.”எந்த வேலைக்கும் போகாத உங்களுக்கு எப்படி திருமணம் நடந்தது?“நான் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேச விரும்புவதில்லை. என் மனைவி அரசாங்க ஊழியராக இருந்தார். கட்சி ஆதரவாளராக இருந்தார். அதனால் என்னைத் திருமணம் செய்துகொண்டார்.” நீங்கள் முதலமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராகப் பெறும் சம்பளத்தை கட்சிக்குக் கொடுத்துவிடுகிறீர்கள். கட்சி உங்களுக்கு வெறும் 5 ஆயிரம் ரூபாய்தான் தருகிறது. எப்படி குடும்பத்தை நடத்துகிறீர்கள்?“எங்கள் தனிப்பட்ட செலவு குறைவு. என் மனைவியின் சம்பளமும், என் சம்பளமும் போதுமானவைதான்.”திரிபுராவில் கல்வி எப்படி இருக்கிறது?“கல்லூரிப் படிப்பு வரை அரசு இலவசக் கல்வி தருகிறது. பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். தனியார் பள்ளிகள் மிகக் குறைவு. அதற்குக் கட்டணம் செலுத்த பெரும்பாலானவர்களால் முடியாது.”மாணவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?“படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை. படிப்பது, நல்ல மதிப்பெண் வாங்குவது எல்லாம் முக்கியம்தான். ஆனால் அது மட்டும் போதாது. நல்ல மனிதர்களாக நாம் வளர்கிறோமா என்று நம்மை நாமே கவனித்துக்கொள்ள வேண்டும். முதலில் நம் பெற்றோர்கள், அடுத்து நம்மைச் சுற்றியுள்ள சமூகம் எல்லாவற்றின் மீதும் நமக்கு அன்பும் அக்கறையும் இருக்க வேண்டும். தனிப்பட்ட ஒழுக்கம் மிகவும் முக்கியமானது.”திரிபுராவிலிருந்து சென்னைக்கு வர சரியான நேரத்தில் விமானம் இல்லாததால், மாணிக் சர்க்கார் அகர்தலாவிலிருந்து ஏழு மணி நேரம் ரயிலில் பயணம் செய்து கோல்கட்டா சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை வந்தார். திரிபுராபரப்பு: 10,500 சதுர கி.மீ.மக்கள் தொகை: 37 லட்சம்.கல்வியறிவு: 87.75 சதவிகிதம்.மருத்துவ வசதி: 80 சதவிகித மக்கள் அரசு மருத்துவ சேவையையே பயன்படுத்துகின்றனர். (இந்திய சராசரி 60 சதவிகிதம்)மின்சாரம்: 2014 முதல் தன்னிறைவு அடைந்து பிற மாநிலங்களுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்கிறது. காரணம் இங்கு கிடைக்கும் இயற்கை எரிவாயு.