உள்ளூர் செய்திகள்

சரித்திர சங்கமம்: தாய்லாந்து நாட்டில் பல்லவர் ஏரி

தாய்லாந்து நாட்டில் (பழைய பெயர் -- சயாம்)தக்குவா பா (Takua Pa) என்னும் இடத்தில் பொ.யு. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் கல்வெட்டில் 'அவனி நாரணன்' என்னும் ஏரியை, நாங்கூர்வேள் என்பவர் அமைத்தார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த ஏரியை 'மணிக்கிராமத்தார்' என்னும் பழங்கால தமிழக வணிகக் குழுவினர் பாதுகாத்துப் பராமரித்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் சர்வதேச அளவில் வணிகம் செய்தவர்கள்.தமிழகத்தில் 9ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசு ஆட்சி செய்துகொண்டிருந்தது. புகழ்பெற்ற பல்லவ மன்னர்களில் ஒருவர், மூன்றாம் நந்திவர்மன். இவரது பட்டப்பெயர்களில் ஒன்று 'அவனி நாரணன்'. காவிரிப் பூம்பட்டினம் இவரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பூம்புகாரில் இருந்து பல வணிகர்கள் தாய்லாந்து சென்று, 'தக்குவா பா' பகுதியில் குடியேறினர். தக்குவா பா பகுதி, அந்தக் காலத்தில் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடந்த வணிகப் பாதையில் இருந்த முக்கியமான துறைமுகப் பகுதி. தமிழ் வணிகர்கள் இந்தப் பகுதியில் தங்கியபோது, குடிநீர் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்காக இந்த ஏரியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்த ஏரியினால், தமிழ் மன்னர்களின் நீர் மேலாண்மைத் திறன், இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டி, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்திலும் பரவி இருந்ததை உணரமுடிகிறது. தக்கோலம் என்ற பெயர்தான் மருவி, தக்குவா பாவாக மாறியது என்கிறனர் வரலாற்று அறிஞர்கள். ராஜேந்திர சோழனின் கடாரம் படையெடுப்பைக் கூறும் மெய்கீர்த்தி, அங்கே எந்தெந்த நாடுகளை அவர் வென்றார் என்பதை விவரிக்கும்போது, 'கலைதக் கோர்ப்புகழ் தலைத்தக் கோலமும்' என்ற வரி இருக்கிறது. ஆகையால் அங்கே தமிழ்ப் பெயரான தக்கோலம் இருந்ததையும் அறிய முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !