சரித்திரம் பழகு: யார் இந்த அரசர்
இவர் ஒரு சோழ அரசர். இளமையில் இவருக்கு, ராசேந்திரன் என்ற பெயரும் இருந்தது. இவரின் தாய் அம்மங்கை. இவரின் தந்தை ராசராச நரேந்திரன். இவர் பிறப்பதற்குச் சில தினங்களுக்கு முன் ராஜேந்திர சோழன் இறந்து விட்டதால், அவரின் நினைவாக இவருக்குப் பெயர் சூட்டினர். நன்கு தமிழ் கற்றவன் என்பதால் பண்டித சோழன் என்ற சிறப்புப் பெயரும் இவருக்கு உண்டு. தென் கலிங்கம், வடகலிங்கப் போர் என, கலிங்க நாட்டின் மீது இரண்டு முறை போர்த் தொடுத்தார். முதல் போருக்கு இவரின் மகன் விக்ரம சோழன் தலைமை தாங்கினார். போரில் தென்கலிங்க மன்னர் வீமனை வென்றார். வடகலிங்கப் போருக்குக் கருணாகரத் தொண்டைமான் தலைமை தாங்கினார். போரில் அனந்த வர்மனை வெற்றி கொண்டார். கலிங்கப் போர், பதினொன்றாம் நூற்றாண்டு முதல் இன்று வரை, பேசுபொருளாக இருந்து வருகிறது. சமகால அரசியலிலும் அது பிரதிபலிக்கிறது. சிவன் மீது மிகவும் பற்று கொண்டவராக இருந்தார். இதனால் இவருக்கு, 'திருநீற்றுச் சோழன்' என்ற விருதுப் பெயரும் உண்டு.இவர் ஆட்சிக்கு வந்ததும், நாட்டு மக்களின் வரிச்சுமையை உணர்ந்து, சுங்க வரியை நீக்கினார். இதனால் இவர் சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுகிறார். இவரின் மனைவியருள் ஒருவர் தீனசிந்தாமணி. இவரின் பெயரில் செய்யாறு அருகே தீனசிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்ற ஊர் அமைக்கப்பட்டது. அந்த ஊர் இன்று பிரம்மதேசம் என்று அழைக்கப்படுகிறது. சோழ நாட்டை கி.பி.1070 முதல் 1120 வரை அரசாட்சி செய்த இந்த மன்னர் யார்?விடைகள்: முதலாம் குலோத்துங்கன்