ஹாக்கி சூறாவளி
தன்ராஜ் பிள்ளை - 16.7.1968 - புனே, மஹாராஷ்டிராஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில், 1928ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை, தொடர்ந்து 6 முறை தங்கப் பதக்கம் வென்ற பெருமை இந்தியாவுக்கே. அதன்பிறகு, 8 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் 1964, 1980 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. நாளடைவில் தடுமாறி வெற்றியில் இருந்து பின் தங்கியது, இந்திய அணி. அதிலிருந்து மீளும் வாய்ப்பாக 1998 டிசம்பரில் நடைபெற்ற பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டி அமைந்தது. அதன் ஹாக்கி இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 5-3 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா தங்கம் வென்றது. இதற்குக் காரணம் தன்ராஜ் பிள்ளையின் அபாரமான ஆட்டம். 6 போட்டிகளில் 11 கோல்கள் அடித்தார். முதல் 3 போட்டிகளில் 8 கோல்களை அடித்திருந்தார். தனது அபார வேகம், பந்தைக் கடத்தி எடுத்து முன்னேறிச் செல்வது, சுயமாக கோல் அடிப்பது, சிறப்பாகக் கடத்துவது என்று முழுத்திறமையை வெளிப்படுத்தினார். இந்திய ஹாக்கியின் மதிப்பை சர்வதேச அளவில் நிலைநாட்ட, ஹாக்கி மைதானங்களில் சூறாவளியாகச் சுழன்றடித்தார் தன்ராஜ் பிள்ளை.இளமைப் பருவத்தில் வீட்டுக்கு அருகில் இருந்த மைதானத்தில் நண்பர்களுடன் ஹாக்கி விளையாடி, தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டார். இவருடைய சகோதரர் ரமேஷ், இந்திய அணிக்காக பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, இருக்கிறார். அவருடைய தீவிர பயிற்சியும், அனுபவமும் தன்ராஜ் பிள்ளையின் வெற்றிகளுக்கு நல்ல பாதை அமைத்துக் கொடுத்தன.1989 டிசம்பர் முதல் 2004 ஆகஸ்ட் வரை, இந்திய அணி சார்பில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் தன்ராஜ். நான்கு ஒலிம்பிக் போட்டிகள் (1992, 1996, 2000, 2004), நான்கு உலகக் கோப்பை போட்டிகள், நான்கு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள், நான்கு ஆசியப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆசியக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவரது தலைமையில் பங்கேற்ற இந்திய அணி, கோப்பையை வென்றது.சாதனைகள்:* பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக கோல்.* 1994ல் சிட்னியில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் உலக லெவன் அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர்.விருதுகள்* ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது* பத்மஸ்ரீ விருது