அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கிறது?
ஹிலாரி கிளிண்டன், டிரம்ப்பை விட அதிகமான மக்கள் வாக்குகளைப் பெற்றார். ஆனாலும், அவர் அதிபராகத் தேர்வாகவில்லை. மக்களின் வாக்கு யாருக்கு அதிகமாக கிடைக்கிறதோ, அவர் தானே அதிபராக வேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால், அமெரிக்கத் தேர்தல் முறை சற்று மாறுபட்டது. அதனால் தான், அதிகமான மக்கள் வாக்கைப் பெற்றாலும், ஹிலாரியால் அதிபர் பதவியை அடைய முடியவில்லை. இது ஏன் என்று புரிந்துகொள்ள அங்கிருக்கும் தேர்தல் நடைமுறையை தெரிந்து கொள்வோம்.தேர்தல் முதல் கட்டம்கட்சியின் சார்பில், யார் நிற்பது என்பதை தீர்மானிக்க, முதலில் கட்சிக்குள்ளேயே தேர்தல் நடக்கும். இதை 'ப்ரைமரி' (Primary) என்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும், கட்சியின் உறுப்பினர்கள் கூடி வாக்களித்ததன் அடிப்படையில், எந்த வேட்பாளருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ, அவரே கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அவரே, தன்னுடன் துணை அதிபர் பதவிக்கு யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பார்.எலெக்டோரல் காலேஜ்அமெரிக்காவில் மக்கள் வாக்குகளைவிட, மாகாணங்களில் பெறப்படும் எலெக்டர்களின் எண்ணிக்கையே முக்கியமானது. அமெரிக்காவில் மொத்தம், 50 மாகாணங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு மாகாணத்திலும் 'எலெக்டர்கள்' (Electors) எண்ணிக்கை மாறுபடும்.பெரிய மாகாணங்களான ப்ளோரிடா, கலிபோர்னியா, டெக்ஸாஸ் போன்றவற்றில், எண்ணிக்கை அதிகம். ஐயோவா உள்ளிட்ட சில சிறிய மாகாணங்களில், உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு. இந்த உறுப்பினர்களைக் கொண்டவர்களின் அமைப்புதான், தேர்தல் அவை (Electoral College - எலெக்டோரல் காலேஜ்) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் மொத்தம் 538 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 இடங்களை ஒரு வேட்பாளர் பெற்றாலே, அவர் அதிபர் பதவிக்கு தகுதி பெறுவார். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள், இந்த எலெக்டர்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் பதவியைப் பிடிக்க வேண்டும். எலெக்டர்கள் வாக்கு எப்படி தீர்மானிக்கப்படுகிறது?இது, மக்கள் வாக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் பெரும்பாலான மக்கள் வாக்குகளைப் பெற்றால், அந்த மாநிலத்தின் மொத்த எலெக்டர்களின் வாக்குமே, அந்த வேட்பாளருக்கே போய்விடும். உதாரணமாக, கலிபோர்னியாவில், மக்கள் வாக்கில் பெரும்பான்மை சதவிகிதத்தை டிரம்ப் பெற்றிருந்தால், அந்த மாநிலத்தின் மொத்தமுள்ள 55 எலெக்டர்கள் வாக்குமே அவருக்குத்தான். அதே மாநிலத்தில், ஹிலாரி எந்த அளவு வாக்கு வாங்கியிருந்தாலும், அதற்கேற்ப அவருக்கு எலெக்டர்கள் ஒதுக்குவதில்லை. எனவே, பெரிய மாநிலங்களில், பெரும்பான்மை மக்கள் வாக்கு பெற்றால், அதிக எலெக்டர்கள் கிடைப்பார்கள். தேர்தல் நாள்: எப்படி வாக்குப் பதிவு நடக்கிறது?* தேர்தல் நாளன்று, மக்கள் மறைமுகமாக தேர்ந்தெடுப்பது, இறுதியாக அதிபரையும், துணை அதிபரையும் தேர்ந்தெடுக்கப் போகும் எலெக்டர்களைத்தான். * பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடனேயே, இரு அதிபர் வேட்பாளர்களில் யாருக்கு அதிக எலெக்டர்கள் கிடைத்திருக்கிறார்களோ, அவரே அடுத்த கட்டத்தில் அதிபராவார். அடுத்து எெலக்டர்கள் கூடி, நிஜ தேர்தலை நடத்துவார்கள். * இந்தமுறை நடைபெற்ற தேர்தலில், டிரம்ப் 290 எலெக்டர்களையும், ஹிலாரி 228 எலெக்டர்களையும் வென்றிருக்கின்றனர். மக்கள் வாக்குகளில் ஹிலாரிக்கு 47.7 சதவிகிதமும், டிரம்ப்புக்கு 47.5 சதவிகிதமும் கிடைத்திருக்கின்றன. ஆனால், அதிக எலெக்டர்கள் உள்ள மாநிலங்கள், டிரம்ப்புக்கு கிட்டியதால், அவர் ஜெயிக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார். பிரச்சாரம் அமெரிக்காவின் முக்கிய இரண்டு கட்சியினரும், பெரும்பாலும் உறுதியாக பெரும்பான்மை இருக்கின்ற இடங்களைவிட, ஸ்விங் ஸ்டேட்ஸ் (Swing States) பகுதிகளில்தான், தீவிரமாக பிரசாரம் செய்வார்கள். அதாவது, சில மாநிலங்களில் நிலையாக ஒரே கட்சிக்கு என்று இல்லாமல், மாற்றி மாற்றி வாக்குகளை பதிவு செய்வார்கள். ஒருமுறை ஜனநாயகக் கட்சி, மறுமுறை குடியரசுக் கட்சி என வாக்களிப்பார்கள். அந்த மாதிரியான பகுதிகளில்தான், தீவிர பிரச்சாரங்கள் நடைபெறும்.ஊடகங்கள், விளம்பரங்கள், சமூக அமைப்புகள், குழுக்கள் என, பல்வேறு வழியில் கட்சிகள் தங்களுடைய இருப்பை காண்பித்து கொள்ளும். குறிப்பாக, கடந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில், சமூக வலைத்தளங்களின் பங்கு மிக முக்கியம். மாற்றி ஓட்டு போட முடியாதா?அடுத்த கட்டத்தில், எலெக்டர்கள் ஓட்டு போடும்போது, டிரம்ப்புக்கு அதிக எலெக்டர் வந்திருந்தாலும், அவர்கள் திடீரென மாறி, ஹிலாரிக்கு ஓட்டு போட்டுவிட முடியாதா என்ற கேள்வி எழும். பொதுவாக அப்படி நடக்கும் மரபு இல்லை.தவறவிட்டவர்கள் எலெக்டோரல் காலேஜ் வாக்குகளை பெற முடியாமல் தோல்வியுற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் அனைவருமே, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்கு அதிக மக்கள் வாக்குகள் கிடைத்தும், எலெக்டர்களின்களின் பெரும்பான்மை கிடைக்காமல், வாய்ப்புகளை தவறவிட்டு இருக்கிறார்கள். ஹிலாரி அப்படி தோற்ற முதல் நபர் அல்ல. 1. ஆண்ட்ரூ ஜாக்சன் 1824 (Andrew Jackson)2. சாமுவேல் டில்டென் 1876 (Samuel Tilden)3. க்ரோவர் க்ளீவ்லாண்ட் 1888 (Grover Cleveland) 4. அல் கோர் 2000 (Al Gore)