பற்ற வைப்பது எப்படி?
இந்தக் காலத்தில் லைட்டரைக் கொண்டு, நொடியில் கேஸ் அடுப்பைப் பற்ற வைத்துவிடுகிறோம். லைட்டர், தீப்பெட்டி போன்றவை இல்லாத காலத்தில், மக்கள் எப்படி நெருப்பு மூட்டி இருப்பார்கள்? சமையல் செய்வதைவிட, நெருப்பு மூட்டுவதுதான் அவர்களுக்குப் பெரும் சுமையாக இருந்திருக்கும். தீ உண்டாக்க அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சிலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.தீக்கடைக்கோல் காடுகளில், மரங்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பொறி உண்டாக்குவதைக் கண்ட ஆதி மனிதர்கள், ஒரு சில வகை மரங்களின் கட்டைகளைப் பயன்படுத்தி, நெருப்பு உண்டாக்கக் கற்றுக்கொண்டார்கள். கல்லின் மீது சொரசொரப்பான மரக்கட்டைகளை வைத்துக் கடைந்து, தீப்பொறி உண்டாக்கி, சருகுகளைப் பற்ற வைப்பார்கள். கடைந்து தீப்பொறியை உருவாக்கியதால், அந்தக் கட்டைக்கு, 'தீக்கடைக்கோல்' என்ற பெயர் வந்தது. இந்தக் கோல்கள், பெரும்பாலும் வன்னி அல்லது அரச மரத்தின் துண்டுகளைக் கொண்டு செய்யப்பட்டன. இதற்கு 'ஞெலிகோல்' என்ற பெயரும் உண்டு. 'ஞெகிழ்' என்ற பழந்தமிழ்ச் சொல், தீயையும், 'ஞெலி' என்ற வினைச்சொல், தீப்பற்றி எரிதலையும் குறிக்கின்றன. ஞெலிகோலால் உண்டாக்கப்பட்ட தீயால் எரியும் தீப்பந்தந்துக்கு, 'ஞெகிலி' என்று பெயரும் உண்டு. சிக்கிமுக்கிக்கல்சில வகை படிகக் கற்கள், ஒன்றோடு ஒன்று உராயும்போதும், சில உலோகத்துடன் அடிபடும்போதும், தீப்பொறிகளை உருவாகும். 'சிக்கிமுக்கிக்கல்' எனப்பட்ட இந்தக் கற்களைக் கொண்டு, தீப்பொறி உருவாக்கி, தீ மூட்டுவது வழக்கமாக இருந்துள்ளது. கங்கு விறகு எரிந்து முடியும் நிலையில், அடுப்பில் எஞ்சி இருக்கும் கரித் துண்டுகள் அணைந்துவிட்டது போலக் காணப்படும்; இருந்தாலும் அதில் நெருப்பு கனன்றுகொண்டே இருக்கும். ஊது குழலால் ஊதி, மீண்டும் நெருப்பை மூட்டிவிட முடியும். இதை 'கங்கு' என்பார்கள். அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும், எந்நேரமும், கங்கு இருந்துகொண்டே இருக்கும். கங்கு அணைந்துவிட்டால், பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி அடுப்பு பற்ற வைப்பார்கள்.