உள்ளூர் செய்திகள்

கவிதையை எப்படி வாசிக்க வேண்டும்?

மற்ற நூல்களைப் படிப்பதற்கும் கவிதை நூலை வாசிப்பதற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. கவிதை நூல்களைக் கூடுதல் கவனத்துடன் படிக்கவேண்டும்.ஏனெனில், உரைநடை நூல்கள் எதையும் நேரடியாகச் சொல்லிவிடுபவை. அவற்றை ஒவ்வொரு சொல்லாக, சொற்றொடராகப் படித்தாலே பொருளை முழுமையாக உணர்ந்துவிடலாம்.ஆனால் கவிதை நூல்கள் மாறுபடுகின்றன. ஒரு கவிதையில் கவிஞர் பயன்படுத்தியிருக்கும் சொற்களை மட்டும் நேரடியாகப் படித்தால், அக்கவிதையின் பொருளை முழுமையாக உணர இயலாது. 'கதை படிப்பதுபோல கவிதையைப் படிக்கக்கூடாது' என்கிறார் பெ. தூரன். 'அப்படிப் படித்தால் கவிதையைப் பூரணமாகச் சுவைக்க முடியாது. அமைதியாக இருந்து கவனமாகக் கவிதையைப் படிக்கவேண்டும். கற்பனைத்திறனையும் சேர்த்துக்கொண்டு படிக்கவேண்டும். பல தடவை படிக்கவேண்டும். ஒவ்வொரு சொல்லும் சந்தமும் அசைவும் நெளிவும் குறிப்பும் மறைப்பும் என்னென்ன உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புகின்றன என்று கண்டு அனுபவிக்க அதுதான் வழி!'அதனால்தான், உரைநடையுடன் ஒப்பிடும்போது கவிதைகள் சுருக்கமாக இருக்கின்றன. 'ஆத்தி சூடி'யிலுள்ள கவிதைகளெல்லாம் ஒரே வரி. திருக்குறளில் ஒவ்வொரு கவிதையும் இரண்டே வரி. பெரும்பாலான பழந்தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் நான்கே வரி. சொற்களின் அமைப்பு, உவமைகள், கவிதை எழுதப்பட்ட சூழல் பலவற்றையும் வாசகர்கள் மனத்தில்கொண்டு படிக்க வேண்டும். சுருக்கமாக எழுதப்பட்டாலும், விரிவான உணர்ச்சிகளைப் புரியவைக்கும் அரிய கலைவடிவம் கவிதை. அதற்கு உரிய நேரத்தைக் கொடுத்து வாசிக்க வேண்டும். அது கவிஞருக்குத் தரும் பெருமதிப்புமட்டுமல்ல, நமக்கும் நல்ல அனுபவ பயனைத் தரக்கூடிய ஒரு பழக்கம்.- என். சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !