உள்ளூர் செய்திகள்

ஐ... ஆப்பிள் தந்தவர்!

ஸ்டீவ் ஜாப்ஸ் (24.2.1955 - 5.10.2011)சான் ஃப்ரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்காஉலகின் பிரபல கணினித் தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவர், ஸ்டீவ் ஜாப்ஸ். பொறியியல் படிப்புக்கு பாதியிலேயே 'டாட்டா' காட்டிவிட்டு, தனது நண்பர் ஸ்டீவ் வாஸ்னியாக் உடன் இணைந்து, 'ஆப்பிள்' நிறுவனத்தைத் தொடங்கினார். அவரின் முதல் அலுவலகம், கார் நிறுத்தும் இடத்தில்தான் தொடங்கப்பட்டது. கணினி அப்போதுதான் அறிமுகமான சமயம். ஆப்பிள் 1 என்ற கணினியை அவர்கள் தயாரித்து வெளியிட்டனர். அதில் சில குறைகள் இருந்ததால், உடனே அதையும் திருத்தி ஆப்பிள் 2 என்ற வண்ணத்திரை கணினியை உருவாக்கி அசத்தினர்.ஸ்டீவ் ஜாப்ஸுக்கு சாஃப்ட்வேர், கணினி பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. எப்படி வேலை வாங்க வேண்டும், எந்தப் பொருளை எப்படி, எவ்வாறு, எப்போது உருவாக்க வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதன்பிறகு, மேக் என்ற மேக்கின்டாஷ் (Macintosh) தனிக் கணினியை (PC) ஸ்டீவ் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கியது ஆப்பிள் நிறுவனம். அது மக்கள் வாங்குகிற விலையில் இல்லை. இதற்கிடையில் சில சம்பவங்கள் காரணமாக, ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகிய ஸ்டீவ், 'நெக்ஸ்ட்' நிறுவனத்தைத் தொடங்கினார். 'நெக்ஸ்ட்' நிறுவனமும் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியவில்லை. உடனே, 'பிக்ஸார்' என்கிற அனிமேஷன் நிறுவனத்தை வாங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். டிஸ்னியுடன் இணைந்து 'டாய் ஸ்டோரி' என்கிற திரைப்படத்தை உருவாக்கி, திரைத்துறையில் புதிய வரலாற்றை உருவாக்கினார் ஸ்டீவ்.அதன்பிறகு, தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் இணைந்து, மேக் கணினிக்குப் புது வடிவம் கொடுத்து, 'ஐ-மேக்' என்ற பெயரில் வெளியிட்டார். அது பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பின், இசைக்கென ஐ-டியூன்ஸ் (i Tunes) என்ற சாஃப்ட்வேரை 2001ல் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஐ-பாட் (i Pod) என்ற கையடக்க இசை கேட்கும் சாதனத்தையும் அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப உலகில் புரட்சி செய்தார். 2007ல், தொலைத் தொடர்புத் துறையில் புதிய சாதனையை ஐ-போன் (i phone) மூலமாகப் பதிந்தார் ஸ்டீவ். 2010ல் ஐ-பேட் (i pad) என்ற கையடக்க கணினியையும் வெளியிட்டார். ஆப்பிள் தலைவராக ஸ்டீவ் அறிமுகப்படுத்திய கடைசி சாதனம் அதுதான்.ஜாப்ஸின் அறிவு, உற்சாகம், தொழிலில் அவர் காட்டிய ஆர்வம் இவைதான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்தன என்று ஆப்பிள் நிறுவனம் அவருக்கு புகழ்மாலை சூட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !