உள்ளூர் செய்திகள்

இருட்டு எனக்குப் பிடிக்கும்! (9)

ஜோவின் அப்பாதான் முதலில் அந்த காரைப் பார்த்தார். உடனடியாக அவர் வாயில் இருந்து, “ஐயோ…” என்கிற பெரிய சத்தம் புறப்பட்டது. ஜோவின் அப்பா இப்போது இருந்தது மேகமலையில். சிறுவர்கள் சுற்றுலா வந்த இடத்தில். அவர் பக்கத்திலேயே கண்ணனின் அப்பா இருந்தார். உடன், வழிகாட்ட வந்த ஒரு வனவாசி இளைஞர்! அவர்கள் பார்த்துக்கொண்டு இருந்தது, சிறுவர்கள் சுற்றுலாவுக்கு எடுத்துக்கொண்டு வந்த காரை!அந்தக் கார் ஒரு பாதி மலைச் சாலையிலும் ஒரு பகுதி, மலைச் சரிவிலுமாக இருந்தது. கொஞ்சம் தள்ளி நின்று பார்ப்பதற்கு, அந்த கார் தொங்கிக்கொண்டு இருப்பது போல இருந்தது. ஜோ அப்பா, கண்ணன் அப்பா, வனவாசி இளைஞர் ஆகிய மூவரும் காரை நெருங்கினர். காரின் பின் புறக் கதவு திறந்துகிடந்தது. ஆசையோடு பக்கத்தில் போனார் ஜோ அப்பா. “அச்சச்சோ… காருக்குள்ள யாருமே இல்லையே…” என்றார். அப்போது “இந்தப் பாருங்கோ… கார்ல ஓட்டை…” என்று காட்டினார் இளைஞர். “இது ஒத்தக் கொம்பு யானை பண்ணுன வேல. காரை முட்டித் தள்ளி இருக்கு. ஒத்தக் கொம்பன் தனியா வந்தா, கண்ணுல படுற ஆளுகள சும்மா விடாது…” என்று பயத்தோடு சொன்னார்.“அப்பிடீன்னா…?” கேட்க வந்ததைப் பாதியில் நிறுத்தினார் கண்ணன் அப்பா.“ஒண்ணு ரெண்டு பேரை முட்டியோ, தூக்கிப் போட்டோ கொன்னுருக்கும். அதைப் பாத்து பயந்து ஓடுன மத்தவங்க, மலைப் பள்ளத்தாக்குல விழுந்திருப்பாங்க. அப்பிடி விழுந்திருந்தா…” இளைஞரும் தான் சொல்ல வந்ததை முடிக்கவில்லை. அவர் கண்களில் பயமும் இருந்தது; வருத்தமும் இருந்தது. அவர் சொன்னதைக் கேட்டதும், ஜோ அப்பா, தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். கண்ணன் அப்பா, வேகமாகப் போய் ஜோ அப்பாவைப் பிடித்துக்கொண்டார். “சார், ப்ளீஸ்… பசங்களுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. அதான் நாம வந்துட்டோமே… அதோட, நமக்கு உதவியும் வரப்போகுதே…” என்றார். ஜோ அப்பாவின் தோளைத் தடவிக் கொடுத்தார்.கொஞ்சம் ஆசுவாசம் ஆன ஜோ அப்பா, “ஸாரி ஸார். எமோஷனல் ஆயிட்டேன். நீங்க சொல்றது சரிதான். பசங்க எங்கேயாவது தப்பிச்சு, பத்திரமாக இருப்பாங்க” என்றார்.அப்போது, ஜோ அப்பாவுக்கு ஆறுதல் சொன்ன கண்ணன் அப்பா, “ஐயோ” என்று கத்தினார். ஜோ அப்பா அதிர்ந்து போய் அவரைப் பார்த்தார். “அங்கே பாருங்க” என்று கண்ணன் அப்பா சுட்டிக் காட்டிய இடத்தில் ஷீலுவின் நீல நிற செருப்பு கிடந்தது! ரத்தம் தோய்ந்திருந்த செருப்பு!ஷீலுவின் காயத்தை ஜோவிடம் சுட்டிக் காட்டினார் வனவாசி. “பாத்தியா, இந்தப் புள்ள புண்ணெல்லாம் சல்லுன்னு ஆறிருக்கு. ஏந்தெரிமா? இந்தப் புள்ள ஒக்காந்த எலையெல்லாம் வெட்டுப்பச்சில. எப்பேர்க்கொத்த புண்ணையும் ஒடனே ஆத்திரும்” என்று அவர் சொல்லிக்கொண்டிருந்த போதுதான் அந்த விநோத சத்தம் கேட்டது.'சத்தம் போடாதீர்கள்' என்று சைகை செய்த வனவாசியை ஷீலு பார்த்தாள். கிசுகிசுப்பான குரலில், “அங்கிள், அது குயிலோட குரல்தானே? ஏன் பயப்படுறீங்க?” என்று கேட்டாள்.அதே ரகசியக் குரலில் வனவாசி பேசினார். “குயிலு, கவுதாரி, முள்ளம்பன்னி, கழுதப் புலி… எல்லாச் சத்தமும் எனக்குத் தெரியும். இது ஏதோ புதுச் சத்தம்” என்றார்.மறுபடி அந்தச் சத்தம் காற்றில் மிதந்து வந்தது. 'க்கூவ்… க்கூவ்…'இப்போது சத்தம் கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது. வனவாசி முகத்தில் புன்னகை வந்தது. “மனுசக் கொரலு…” என்றார். பதிலுக்கு இவரும், 'க்கூவ்… க்கூவ்…' என்று ஒலி எழுப்பியபடியே எழுந்து நடந்தார்.அந்தப் பக்கம் இருந்தும் உற்சாகமாக, 'க்கூவ்… க்கூவ்…' சத்தம் வந்து கொண்டே இருந்தது. மேட்டிலும் பாறைகளிலும் கால் வைத்து ஏறினார் வனவாசி.ஜோவும் ஷீலுவும் தடுமாறியபடியே பின் தொடர்ந்தார்கள்.வனவாசி, பாறையின் உச்சிக்குப் போன அடுத்த நொடி…“ஹோஓஓஓஓ…” என்று பெருத்த சந்தோஷத்தோடு கூச்சல் போட்டார். எதிர்த் திசையில் இருந்தும் அதே உணர்ச்சியோடு கூச்சல் கிளம்பிற்று. அந்தக் கூச்சலில் பல குரல்கள் கலந்து இருந்தன. குறிப்பாகச் சொன்னால், ஐந்து குரல்கள்! டிரைவர், கண்ணன் உள்ளிட்ட சிறுவர் குரல்கள்!“ஓடியாங்க பிள்ளையளா… அங்கனக்குள்ள தெரியிறது யாருன்னு பாருங்க. ஒங்ககூட வந்த பிள்ளைகதானே?” என்று கத்தினார் வனவாசி. இதற்குள் பாறையின் உச்சிக்கு, வனவாசியின் பக்கத்தில் ஜோவும் ஷீலுவும் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு சந்தோஷத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. “ஏய்….” என்று தொண்டையைத் திறந்து கத்தினாள் ஷீலு.தூரத்தில் நின்றிருந்த கண்ணன் மற்றும் குழுவினரும் இவர்களைப் பார்த்துவிட்டார்கள். ஷீலுவும் ஜோவும் நின்றிருந்த பக்கம் இருந்து காற்று வீசிக்கொண்டு இருந்தது. மாலை முடிந்து இரவு கவியப் போகும் நேரம். கண்ணனும் மற்றவர்களும் இவர்களைப் பார்த்துக் கையாட்டினார்கள். ஆனால், அவர்கள் கத்துவதுதான் இவர்களுக்குக் கேட்கவில்லை. எதிர்க்காற்று!அப்போது வனவாசி பேசினார். “அவங்க இந்தப் பக்கம் வந்துட்டா வேலை முடிஞ்சிடும்” என்று சொல்லிக்கொண்டே அவர்களுக்கு சைகை காட்டினார்.ஆனால், அவர்கள், வனவாசி இருக்கும் பக்கமாக வருவது சுலபமாக முடியாது. இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் மலை, ஒரு சித்து வேலை செய்திருந்தது. மேலே இருந்து காட்டாறு, அருவியாக விழுந்தது. அது கொஞ்ச தூரத்துக்கு சம தளத்தில் ஓடி மறுபடி வேகமாக பள்ளத்தில் பாய்ந்தது. அந்த சம தள ஓட்டத்தின் நடுவே பெரிய பெரிய பாறைகள் இருந்தன. இருந்தாலும் அந்த இடத்தில் மிகுந்த வேகத்தோடு தண்ணீர் கடந்தது.அந்தப் பாய்ச்சலைத் தாண்டித்தான் கண்ணனும் மற்றவர்களும் இந்தப் பக்கமாக வரவேண்டும். வனவாசி, ஓடும் தண்ணீரில் பாதிவரை போயிருந்தார். ஒரு பாறையைப் பலமாகப் பற்றிக்கொண்டார். “ஒவ்வொரு ஆளா வாங்கோ… பாறைகளைக் கெட்டியாப் பிடிச்சுக்குங்கோ. தண்ணி வேகத்துக்கு பாறையை விட்டுரக் கூடாது. தாண்டி வந்து என் கையைப் பிடிச்சுட்டீகன்னா, இங்குட்டு வந்துரலாம்…” என்று கத்தினார்.முதலில் ரவி. பதமாக, மெதுவாக, ஆனால் உறுதியாக… பாறைகளைப் பிடித்துக்கொண்டு நடுத் தண்ணீருக்கு வந்தான். அந்த தூரத்திற்கு வனவாசி கைகளை நீட்டிக்கொண்டு இருந்தார். வனவாசியின் கையை ரவி பிடித்ததுதான் தாமதம்… உடும்பு போல ரவியின் கையைப் பிடித்த வனவாசி, 'அலேக்' ஆக அவனைத் தூக்கி இந்தப் பக்கம் வீசினார். அடுத்து ராகினி. தொடர்ந்து குமார்.இதுவரை எல்லாம் நன்றாக நடந்தது.எதிர்க்கரையில் கண்ணனும் டிரைவரும் மட்டும் மிச்சம் இருந்தார்கள். கண்ணன் நீருக்குள் இறங்கப் போனான். அப்போது டிரைவர் அவன் கையைப் பிடித்து இழுத்தார். “கண்ணா, நாம் போறேன்” என்றார்.“பயந்துட்டீங்களா? போங்க, போங்க… நான் கடைசியா வந்துக்குறேன்” என்றான் கண்ணன். டிரைவர் நடுங்கிக்கொண்டே தண்ணீரில் இறங்கினார்.“பெரியவர் சொன்ன மாதிரி பாறையை இறுக்கமாப் பிடிச்சுக்குங்க” என்று சொல்லிக்கொண்டே டிரைவரின் கையைப் பற்றி அனுப்பினான் கண்ணன். எதிர்ப் பக்கம், வனவாசி கையை நீட்டிக்கொண்டு காத்திருந்தார்.ஒரு பாறையைக் கடந்ததுமே டிரைவரின் பதற்றம் அதிகரித்தது. அதனாலேயே பாறையைப் பிடித்திருந்த ஒரு கையை எடுத்து வனவாசி பக்கமாக நீட்டினார். கால் வழுக்கியது. வனவாசி கவனித்துவிட்டார்.டிரைவர் வழுக்கி விழுந்தார். வனவாசியின் கை டிரைவரை எட்டவில்லை.கண்ணன் பிடியில் இருந்து விலகி இருந்தார் டிரைவர்.'ஹோ' என்ற இரைச்சலுடன் கீழே பாய்ந்துகொண்டு இருந்தது காட்டாறு. கீழே விழுந்தார் டிரைவர்.சிறுவர்களின் அலறல் சத்தம் காட்டையே அதிர வைத்தது.(தொடரும்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !