உள்ளூர் செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் ஓடாது!

'இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவீர்! சாலை விபத்துகளைத் தவிர்ப்பீர்!' என அரசும், காவல்துறையும், நீதிமன்றங்களும் எவ்வளவுதான் கூச்சல் போட்டாலும், அதைக் காதில் போட்டுக்கொள்ளாதவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். இருசக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி. ஹெல்மெட் அணிந்தால்தான் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியும் என்பதை உறுதி செய்ய, இருசக்கர வாகனங்களில் ஓர் அமைப்பு இருந்தால்? ஹெல்மெட்டைக் கழற்றினால், வண்டியின் வேகம் குறைந்து அது தானாகவே நின்றுவிடும் என்றால்? பெட்ரோல் இல்லாமல் எப்படி வண்டி ஓடாதோ, அதேபோல் ஹெல்மெட் அணியாவிட்டாலும் வண்டி ஓடாது என்ற நிலை ஏற்படும். விபத்துகள் குறையும். இந்தச் சிந்தனை ஆக்ராவைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்குத் தோன்றியது. ஹிமான்ஷு கார்க் (Himanshu Garg) என்ற அந்த இளைஞர் மின்னியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். கல்லூரியில் படித்த காலத்தில், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட்டையும், வண்டியின் இன்ஜினையும் ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு மைக்ரோ சோலார் பேனல் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம், ஹெல்மெட் அணிவதைக் கட்டாயப்படுத்த முடியும். அன்றைக்கு உத்தர பிரதேச மாநில முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ், ஹிமான்ஷுவை அழைத்துப் பாராட்டிப் பரிசளித்ததுடன், அந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் அரசு நிதியையும் உருவாக்கினார். சிறுவயது முதலே, வீட்டு உபயோக மின்னியல், மின்னணு சாதனங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியவர் ஹிமான்ஷு. இவர் தனது வீட்டில், தொட்டுப் பிரித்துப் பார்க்காத சாதனங்களே இல்லை எனலாம். உள்ளூர் கடைத்தெருவில் கிடைக்கும் சின்னச் சின்ன மின்னியல், மின்னணு பாகங்களை வாங்கி வந்து, சாதனங்களில் பொருத்தி, அவை தம் பழைய பயன்பாடுகளோடு, புதிய பயன்பாடுகளையும் வழங்கும் வகையில், அவற்றை மெருகேற்றுவாராம். இவற்றை எல்லாம் செய்வதற்கு ஹிமான்ஷுவின் ஆசானாகச் செயல்படுவது இணையம்தான். ஒரு குறிப்பிட்ட சாதனமும், அதன் பாகங்களும் எப்படி வேலை செய்கின்றன என்பதையும், அதனுடன் தொடர்புடைய அனைத்து இயற்பியல், பொறியியல் தத்துவங்களையும் இணையத்தில் தேடிப் படித்துவிடுவாராம். 2010ம் ஆண்டில், ஹிமான்ஷு பள்ளி மாணவராக இருந்த காலத்தில், இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் தவறுதலாக வந்து விட்டால், அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டு விபத்து நிகழாமல் தடுக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்கினார். ரயில்களுக்கு இடையில் 300 மீட்டர் தொலைவு இருக்கும்போது, அந்த இரண்டு ரயில்களும் தானாகவே நின்றுவிடும் வகையில், ஒரு பிரேக் அமைப்பை ஏற்படுத்தினார். இதற்காக மத்திய அரசின் விருது இவருக்குக் கிடைத்தது. இந்த அமைப்பை உருவாக்குவதற்கு ஹிமான்ஷுவுக்கு 1.5 லட்சம் செலவானது. மேலும், ரயில் இன்ஜின் டிரைவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, ரயிலின் பிரேக் அமைப்பையும், இஞ்சின் அமைப்பையும் கற்றுக்கொண்டு, இறுதியாக, இன்ஃப்ரா ரெட் சென்சார் (Infra red) அமைப்பை வடிவமைத்து வெற்றி கண்டார். இவரது தந்தை தினேஷ் கார்க் உள்ளூரில் மளிகைக் கடை வைத்திருக்கிறார். தனது மகனின் ஆர்வத்தை ஊக்குவித்து, அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !