கேரளமும் தென்னையும்
ஒரு தென்னை மரம், சுமார் 80 முதல் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. அத்தனை ஆண்டுகளும் முறையாகப் பராமரித்தால், நல்ல பலனைக் கொடுக்கும். உலக அளவில தேங்காய் உற்பத்தியில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம். முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நாடுகள், இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ். இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் முதலிடம் கேரளத்துக்குத்தான். கேரளத்தில் மட்டும், 45 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளத்தை அடுத்து, தமிழகத்தில் 27 சதவீதம் விளைவிக்கப்படுகிறது. மேலும், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு தென் மாநிலங்கள்தான், இந்திய தேங்காய் உற்பத்தியில், சுமார் 92 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன.கேரளத்தில், தென்னை மரங்கள் சராசரியாக 25 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியவை. ஒரு மரம், ஓராண்டில் சுமார் 50 காய்கள் வரை தரக்கூடியது. தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் கேரளப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்கின்றன. இதை முறைப்படுத்த, தென்னை வளர்ச்சி மையம், (Coconut Development Board- - CDB) மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்துக்குக் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் கொச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது. தென்னை ஓலை, கூரை வேய பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. தேங்காயை அடுத்து கொப்பரைக்கும் சந்தை வாய்ப்புகள் அதிகம். கேரள, கர்நாடகப் பகுதிகளில் கொப்பரை, அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளப்படும். மேலும், எண்ணெய் தயாரிக்கவும் பயன்படும். தேங்காய் நார், மெத்தைகள் தயாரிப்பிலும், வேறு பலவிதமாகவும் உபயோகிக்கப்படுகிறது. தென்னை ஆராய்ச்சி மையங்கள், தென்னை மூலம் பொருளாதாரத்தை அதிகரிக்க, புதிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற நாடுகளுக்கு தென்னை எப்படி போயிருக்கும்?2011ம் ஆண்டில், தென்னையின் பூர்விகம் பற்றி உறுதியான தகவல்களை தாவரவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தேங்காய்களை, 'டிஎன்ஏ' சோதனை செய்து, ஆய்வு செய்யப்பட்டது. அதன் மூலம் வெளியிடப்பட்ட தகவல், 'ஆதியிலேயே இரண்டு விதமான தென்னைகள் இருந்திருக்கின்றன. பசிபிக் பெருங்கடல் தென்னை என்பது, ஒரு தனி ரகம். இந்தியப் பெருங்கடல் தென்னை என்பது, வேறொரு ரகம். இதில் எது முதலில் வந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை. பசிபிக் பகுதி என்றால், தென்கிழக்கு ஆசியாவில், அதாவது பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் இருந்து, தென்னை மற்ற பகுதிகளுக்குப் பரவியிருக்கலாம். அதேபோல், இந்தியப் பெருங்கடல் பகுதி என்றால், தென்னிந்தியா, இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளிலிருந்து தென்னை மற்ற பகுதிகளுக்குப் பரவியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்தியத் தேங்காய், ஐரோப்பியர்கள் மூலமாகத்தான் அமெரிக்கக் கண்டத்துக்கு பரவியது. அதேபோல், இந்தியாவுக்கு வந்த போர்த்துக்கீசியர்கள்தான், நம் தேங்காய் வகையை ஆப்பிரிக்காவுக்கும், தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதேமாதிரி பசிபிக் தேங்காய் வகையை, தென் அமெரிக்க, மத்திய அமெரிக்கப் பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்தவர்கள், ஸ்பெயின் நாட்டவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.