ராஜா வீட்டு சிங்கக் குட்டி
அரண்மனை போன்ற பெரிய வீடு. அதற்கு ஆனந்த பவன் என்று பெயர். அந்த மாளிகையில் ஓர் அரச குமாரனாக வலம் வந்தவர் ஜவஹர்லால் நேரு. பெரும் செல்வந்தரான மோதிலால் நேருவின் மகனான நேரு, தன் பதினைந்தாம் வயதிலேயே கல்விக்காக வீட்டை விட்டு வெளியேறினார். இங்கிலாந்தின் ஹாரோ (Harrow) பள்ளியில் படிப்பு. அவரது பள்ளிக் காலத்தில்தான் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டு பிடித்தனர். அதைக் கண்ட நேரு தன் தந்தைக்கு, 'சீக்கிரமே இந்தியாவுக்கு விமானத்தில் வந்து இறங்குவேன்' என்று கடிதம் எழுதினார். விஞ்ஞான வளர்ச்சியில் அவ்வளவு ஆர்வம்.'விடுதலை பெற்ற இந்தியா சுய சார்பு உள்ள நாடாக மலருமா?'என்ற கேள்வி உலக அரங்கில் எழுந்தது. அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக புதிய இந்தியாவைக் கட்டமைத்தார் நேரு. அணைக்கட்டுகள், பாலங்கள், சாலை வசதிகள், அறிவியல், ராணுவம், கல்வி என்று பார்த்துப் பார்த்து நிர்மாணித்து இந்தியாவை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்தார். ஜமீன்தார்களின் பிடியில் இருந்த இந்தியா சிறுசிறு நாடுகளாக உடைந்து போகும் என்ற பயம் பலருக்கு இருந்தது. அதைப் பொய்யாக்கி இந்தியாவை ஒருங்கிணைப்பதில் வெற்றி கண்டார். இந்தியா குடியரசாக சட்டதிட்டங்களை உருவாக்கினார். மனவுறுதி, செயல்திறன், தேசப் பற்று, மக்களிடம் எளிமையாகப் பழகும் குணம் ஆகிய பண்புகள் நேருவிடம் இருந்தன.பக்ராநங்கல், ஹிராகுட், நாகார்ஜுனா போன்ற புகழ் மிக்க அணைகள் இவர் காலத்தில் கட்டப்பட்டவைதான். நாட்டின் மின்தேவை, நீர்த்தேவைகளுக்கு இவை உதவின. தொழில் மயமான இந்தியாவைப் பற்றி கனவு கண்டார் நேரு. 'லட்சக்கணக்கானோரின் கனவுகளை நிறைவேற்ற ஆயிரக் கணக்கானோர் கட்டடங்களை எழுப்புகின்றனர். அந்த இடங்கள்தான் எனக்குக் கோயில்' என்றார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்ததால் தன் வாழ்நாளில் 3,259 நாட்களை சிறையிலேயே கழித்தவர்.நவம்பர் 14 நேருவின் பிறந்த தினம் என்று நமக்குத் தெரியும். அவரது நினைவு தினம் மே 27 (1964).