மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி
சாந்தி: தக்காளி சாதம், தக்காளிச் சட்னி, தக்காளிக் குருமான்னு காஸ்ட்லி லஞ்ச் கொண்டுவந்துருக்கியே... ரொம்ப வசதியா மஞ்சு?மஞ்சு: அட! தக்காளியை என்னவோ தங்கம் மாதிரிப் பேசறே?சா: தக்காளி விலை சதம் அடித்துள்ளதால், மக்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளார்கள்.ம: ஓ தலைப்புச் செய்தியாவே ஆயிடுச்சா? எங்க வீட்டுத் தோட்டத்துலயே தக்காளி விளையுது. அதனாலதான் இன்னைக்கு தக்காளி ஸ்பெஷல்.சா: தக்காளிங்கிறது காய்கறியா, பழமான்னு ஒரு விவாதமே நடந்துகிட்டு இருந்தாலும், உலகில் அதிகம் விரும்பக்கூடிய காய்கறிகள் (பழம்?) லிஸ்ட்ல முதல் இடத்தில் இருக்கிறது தக்காளி!ம: அப்படின்னா, தக்காளிக்கும் பேங்க்ல லோன் தர ஆரம்பிச்சுருவாங்க. எதனால தக்காளி விலை இப்போ அதிகமாகி இருக்கு?சா: தக்காளியை அதிகமா உற்பத்தி செய்கிற மாநிலங்கள் கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், ஒடிசா இங்கே எல்லாம் உற்பத்தி குறைஞ்சுடுச்சாம், அதான்... ம: தக்காளிச் சட்னி சாப்பிடுறவங்களுக்கு வந்த சோதனையா இது? நல்லா சிவப்பா, டேஸ்ட்டா இருக்குமே. நெனச்சாலே எச்சி ஊறுது.சா: ஆமா... ஆமா... தக்காளிக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுக்கிற வேதிப்பொருள் 'லைகோபீன்' (Llycopene). இதுக்கு, பக்கவாதத்தைத் தடுக்குற சக்தி இருக்குறதா விஞ்ஞானிகள் சொல்றாங்க.ம: அப்படியா! வீட்டுக்கு யாராவது சொந்தக்காரங்க வந்தா, ஆப்பிள், ஆரஞ்சு வேணாம் நாலு கிலோ தக்காளி மட்டும் வாங்கிட்டு வாங்கன்னு சொல்லிடலாம். ஹி... ஹி...சா: இப்போ அப்படிச் சொன்னா நம்மளை யாரும் சொந்தக்காரங்கன்னே சொல்லிக்க மாட்டாங்க. தக்காளிக்கும் சொந்தக்காரங்க இருக்காங்க! கத்தரிக்காய், குடை மிளகாய் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இது.ம: அப்படின்னா இனிமே மிளகாய் சட்னிதானா? கொஞ்ச நாளைக்கு சாப்பாட்டுல கண்டிப்பா தக்காளி இருக்காது.சா: சரிதான். வைட்டமின் 'சி' சத்து கொடுத்த, ரத்தத்தைச் சுத்தப்படுத்தின, ரத்த சோகையைக் குணமாக்குற தக்காளி நம்மைவிட்டுத் தள்ளிப் போய்டுச்சே...ம: தக்காளியோட தாக்கம் உனக்கு அதிகமாயிருச்சு. நீ ஒரு புக் எழுது, 'தக்காளி இல்லாம சமைக்கிறது எப்படி'ன்னு. ஹ... ஹா...சா: புத்தகம் எழுதி வெளிவர்றதுக்குள்ள தக்காளி விலை குறைஞ்சிடும். ஆனா, இப்போதைக்கு, 'உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா?'ங்கிற டயலாக்கைச் சொல்ல முடியாது...