நாக் அவுட் நாயகன்!
முகம்மது அலி | 17.1.1942 - 3.6.2016 | கென்டக்கி, அமெரிக்காஅப்போது அவனுக்கு வயது 12. சாலையின் ஓரத்தில் இருந்த தனது சைக்கிளைத் திருட ஒருவன் முயற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்ததும், அவனைச் சரமாரியாகக் குத்தி தாக்க ஆரம்பித்தான். வேகமான குத்துகளுடன் அவன் தாக்கியதை அந்த வழியாக வந்த காவலர் ஜோ மார்டின் பார்த்தார். சண்டைக்கான காரணத்தைக் கேட்டபோது, 'அந்தத் திருடனை அடித்துத் துவைக்க வேண்டும்' என்று ஆக்ரோஷமாகச் சொன்னான் சிறுவன். அவன்தான் பின்னாளில் குத்துச்சண்டை வீரராக உயர்ந்த முகம்மது அலி.இவரது இயற்பெயர் காஸியஸ் மர்செல்லஸ் க்ளே. சிறு வயதிலிருந்தே துடிப்பும் உடல் வலிமையும் இருந்ததால், குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்ற கனவும் அவருக்குள் இருந்தது. அவரது திறமையைப் பார்த்த காவலர் மார்டின் அவருக்குப் பயிற்சியாளராக மாறினார். 1960இல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அப்போதுகூட இந்த உலகம் அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. 1964இல் சோனி லிஸ்டன் என்பவரை வீழ்த்தி, 'ஹெவி வெயிட்' சாம்பியன் விருதை வென்றபோதுதான், உலகம் இவரைக் கண்டுகொண்டது. 1964 முதல் 1967 வரை 'உலக ஹெவி வெய்ட்' குத்துச் சண்டை வீரராகத் திகழ்ந்து வரலாற்றை மாற்றி அமைத்தார் முகம்மது அலி.ஒரு பட்டாம்பூச்சி போல மிதந்து, தேனீயைப் போல கொட்டி களத்தில் வேகமாகச் செயலாற்றி எதிரிகளை நிலைகுலையச் செய்வதுதான் அவரது ஸ்டைல். இதனாலேயே அமெரிக்காவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் புகழ்பெற்றார். 1981 வரை குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்தார். தன்னை வீழ்த்தியவர்களை வீழ்த்தி உலக விருதை மூன்று முறை வென்ற முதல் வீரர் இவர்! இதனால்தான் முகம்மது அலிக்கு 'The Greatest' என்ற பட்டம் கிடைத்தது. ஓய்வுபெற்ற பிறகு பக்கவாத (Parkinson) நோய் தாக்கியது. குத்துச்சண்டைகளின் போது தலையில் விழுந்த குத்துகளால் வந்த இந்த நோயிடமும் சண்டை போட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் நிமோனியா பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, என பல நோய்கள் அவரை வீழ்த்தினாலும், உலகம் முழுவதும் குத்துச் சண்டையைப் பிரபலப்படுத்திய 'நாக் அவுட்' நாயகனை நம் நினைவுகளில் இருந்து யாராலும் வீழ்த்திவிட முடியாது.சாதனைகள்தொழில்முறை குத்துச்சண்டை61 போட்டிகள்56 வெற்றிகள்37 நாக் அவுட் வெற்றிஉலக குத்துச்சண்டை சாம்பியன் 3 முறை